‘ஹாட் ஸ்பாட் 2 மச்’,  சென்சாரில் தப்பியது எப்படி? – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்!

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா,  ஆதித்யா பாஸ்கர் , ரக்சன்,  பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசுகையில்,

” இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் என்னுடைய மகன் ஆதித்யா பாஸ்கருக்கு தான்  நண்பர். என் மகன் பாஸ்கர் தான் உங்களை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் சந்தித்து கதை சொல்ல விரும்புகிறார் என சொன்னார். அவரை அழைத்து கதை கேட்டேன். கதை சொல்லும்போது சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் ஒரே கதையில் நீங்களும் உங்களது மகனும் நடிக்கிறீர்கள் என்றார். அது எனக்கு சந்தோஷத்தை அளித்தது. எனக்கு சொன்ன கதாபாத்திரம் உண்மையான விசயம் தான். சினிமா நடிகர்களை ரசிக்கத்தான் வேண்டும். அவர்களை பூஜித்து, ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதை விளக்கி சொல்லக்கூடிய கதை. இந்த கதையில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், அறிமுகப்படுத்திய என் மகனுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சஞ்சனா திவாரி பேசுகையில்,

” ஷ்ரனித்தா எனும் கதாபாத்திரத்தை என்னை நம்பி வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி . படப்பிடிப்பு தளத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கிய சக, நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில்,

” ஹாட்ஸ்பாட் பார்ட் 1 பார்த்தேன். இந்த இயக்குநர் வித்தியாசமான கதாபாத்திரங்களை வடிவமைக்கிறாரே..! இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினேன். அதன் பிறகு இப்படத்திற்காக என்னை தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். அது நன்றாக இருந்தது. என்னை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக யோசித்த இயக்குநருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அஸ்வின் குமாருக்கும் நன்றி. தம்பி ராமையா – எம் எஸ் பாஸ்கர் போன்ற மூத்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அனைவரும் படத்தை திரையரங்கிற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,

”  என் மகன் உமாபதி இப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் கார்த்திக்கை பற்றி நல்லதொரு மதிப்பீட்டை சொல்லி இருக்கிறார்.‌ அதன் பிறகு இந்த இயக்குநரின் இயக்கத்தில் வெளியான படைப்புகளை பார்த்தேன். அதன் பிறகு அவர் என்னை நேரில் சந்தித்து கதையை சொன்னார். அவர் கதை சொன்ன விதமே முதிர்ச்சியானதாக இருந்தது. அவருடைய அணுகு முறையில் அவர் தயாரிப்பாளரின் இயக்குநர் என்பதும் தெரிந்தது. அவருக்கு எல்லா விசயங்களும் தெரிந்திருக்கிறது. சினிமாவுக்கு தேவையான 24 பிரிவுகளையும் தெரிந்து வைத்திருப்பதுடன் மட்டுமல்லாமல்  அடிப்படையில் அவர் ஒரு நடிகர்.  ஒரு நடிகர் கிரியேட்டராக இருக்கும்போது.. இயக்குநர்  என்ன எதிர்பார்க்கிறார் என்பதை ஒரு நடிகரால் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இவர் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் அழுத்தமான இயக்குநராக முத்திரை பதிப்பார். அவருடைய இயக்கத்தில் இந்தப் படத்தில் ஒரு அத்தியாயத்தில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் நடித்ததற்காக பாராட்டு கிடைத்தால் அவை அனைத்தும் இயக்குநரைத் தான் சேரும்” என்றார்.

நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில்,

” இந்தப் படத்திற்காக என்னை அதிகமாக வெறுத்ததும் இயக்குநர் தான். என்னை அதிகமாக நேசித்ததும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். இந்தக் கதை அல்ல. வேறு கதைகள் நிறைய சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றை தேர்வு செய்து பணியாற்றலாம் என திட்டமிட்டிருந்தோம். அது பல காரணங்களால் தள்ளிப் போனது. அந்த தருணத்தில் தான் என்னிடம் ‘ஹாட்ஸ்பாட் 2 ‘ படத்திற்கான ஐடியாவை சொன்னார். அதைக் கேட்டதும் எனக்குப் பிடித்திருந்தது.

சினிமா என்பது ஈசி கிடையாது. யாரேனும் எங்கேனும் ஒரு சிறிய தப்பை செய்தாலும் அது அனைவரையும் பாதிக்கும். இதற்கு இயக்குநர் தான் அனைவரையும் சரியாக ஒருங்கிணைக்க வேண்டும். இதனை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மிக கச்சிதமாக செய்தார். அவரையும், அவரது குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன்.

என்னுடன் நடித்த பவானி ஸ்ரீ, அமர், ஆதித்யா – ரக்சன், தம்பி ராமையா, தயாரிப்பாளர் பாலாமணி மார்பன், மற்றும் ஒளிப்பதிவாளர் – படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

இயக்குநர் – நடிகர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்,

” ஹாட்ஸ்பாட் 2 படத்தை வழங்கிய விஷ்ணு விஷாலுக்கு நன்றி. விநியோகம் செய்யும் பைவ் ஸ்டார் செந்திலுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பாலாமணி மார்பன்- அனில் – சுரேஷ் – ஆகியோருக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதால் இந்த இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்திற்கு சென்சார் பிரச்சனை எப்படி இருந்தது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் இப்படத்தின் பார்ட் 2 கதையை எழுதும் போதே எனக்கு சென்சார் தான் நினைவிற்கு வந்தது. அதனால் சென்சாரில் பிரச்சனை வராமல் ஹாட்ஸ்பாட் 2 வில் எதை எதை டூமச்சாக சொல்ல முடியும் என்று  நினைத்து தான் இந்த கதையை எழுதினேன். அதனால் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அனைவரும் 23ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.