‘ஹாட் ஸ்பாட்’ – விமர்சனம்!

KJB Talkies,  நிறுவனம் சார்பில், K.J பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள படம் “ஹாட்ஸ்பாட்”. எழுதி இயக்கியிருக்கிறார், விக்னேஷ் கார்த்திக். ‘சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில், தினேஷ் கண்ணன்  திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார். இதில், கலையராசன், சோஃபியா,  சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கௌரி ஜி. கிஷன்,  ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்னேஷ் கார்த்திக், திரைப்பட இயக்குநராக துடிக்கும் இளைஞர். சில போராட்டங்களுக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்குவதோடு, அவரது பெண்ணையும் சாமார்த்தியமாக மணந்து கொள்ள சம்மதம் பெறுகிறார். அது எப்படி? என்பது தான், ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் சில சுவாரசியங்கள் கொண்ட திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கே.ஜெ.பாலமணிமார்பன் என்ற தயாரிப்பாளரிடம் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் சொல்லும் முதல் கதையில், (இருவருமே இப்படத்தின் உண்மையான இயக்குநர் – தயாரிப்பாளர்)திருமண சம்பிரதாய, வழக்கமான நடைமுறையினை தவிர்த்து, ஆண் கழுத்தில் பெண் தாலி கட்டுவதும், மாமியார் மருமகள் சண்டைக்கு பதிலாக மாமனார் மருமகன் சண்டையிட்டு கொள்வதுமான இன்ன பிற, பெண்களுக்கான நடைமுறைகள் அனைத்தும் ஆண்களால் செய்யப்படுவது போல், பெண்களுக்கான ராஜ்ஜியத்தினை உருவாக்குகிறார். இதில், கெளரி கிஷன் – ஆதித்யா பாஸ்கர் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதைப்போல் அடுத்தடுத்த மூன்று கதைகள் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு ஆந்தாலஜி போல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக சொல்லப்படும் கதையினில், சாண்டி – அம்மு அபிராமி இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்றாவதாக சொல்லப்படும் கதை, சற்று வில்லங்கமான கதை. அதாவது, ஆண் விபச்சாரத்தை (Male prostitution) பற்றிய கதை.னைதை மிக தைரியமாக கையாண்டிருக்கிறார், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இது, இயக்குநர் கே.பாலசந்தர் டச்சில் இருக்கிறது. இந்தக் கதையினில்,  கதையில் சுபாஷ் – ஜனனி நடித்திருக்கிறார்கள்

நான்காவதாக சொல்லப்படும் கதையினில், கலையரசன் – சோஃபியா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதாவது, சேனல்களில் ரியாலிட்டி ஷோவில் நடக்கும் அட்டூழியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த நான்கு வெவ்வேறு கதைகளில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே, தங்களது கதாபாத்திரத் தன்மையினை உணர்ந்து, சிறப்பாக நடித்துள்ளனர். இதில், சுபாஷ் – ஜனனி இருவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர், கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் நான்கு கதைகளிலும் வெவ்வேறு விதமான கோணங்களில் காட்சிப்படுத்தியது சிறப்பு!

அதேபோல், இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான்  பின்னணி இசையினால், காட்சிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாடல்களும் குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

மொத்தத்தில்,  ‘ஹாட் ஸ்பாட்’ சர்ச்சைகளை உருவாக்கும் படைப்பு!