‘இரவின் விழிகள்’ திரைப்படத்தில் சிக்கல் ராஜேஷ், முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, அவரே எழுதி இயக்கியிருக்கிறார். P. மஹேந்திரன் நடித்திருப்பதுடன், தயாரித்திருக்கிறார். மேலும் நீமா ரே, நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன் ராஜ், அன்சி சிந்து, அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்துள்ளார், ஏ.எம்.அசார்.
கணவன், மனவியான மஹேந்திரனும், நீமா ரேயும் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். அதில், எதைப்பற்றியும் கவலைப் படாமல் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜும், போலீஸ் கான்ஸ்டபிள் சிசர் மனோகரும் ரோந்து செல்லும்போது பைக் திருடன் ஒருவனை மடக்கி பிடிக்கின்றனர். அவனை மேலும் விசாரணை செய்யும் போது, அந்த பைக் காட்டுப்பகுதியில் கிடந்ததாக கூறுகிறான். சேரன் ராஜும், போலீஸ் கான்ஸ்டபிள் சிசர் மனோகரும் காட்டின் உள்ளே செல்கின்றனர். அப்போது சிலர் உதவி கேட்டு கதறுகின்றனர். அவர்களின் அருகே செல்லும்போது, முகமூடி மர்ம மனிதனிடம் இவர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதன்பிறகு, என்ன நடந்தது? என்பது தான், ‘இரவின் விழிகள்’ படத்தின் கதை.
இயக்குநர் சிக்கல் ராஜேஷ் கதாபாத்திரங்கள் கற்பனை என்று கூறினாலும் படம் பார்க்கும்போது, அநேக கதாபாத்திரங்களை ஒரு சில யூடியூப் பிரபலங்களை யூகிக்க முடிகிறது. முதல் கொலையே ‘சரக்கு சங்கர்’ எனும் கதாபாத்திரம் தான். சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை கவர, பலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையினில் பதிவிட்டு வரும் வலைதள வாசிகள், அடுத்தவர்களது வாழ்க்கையினை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கை எப்படி நாசமாகிறது. சொல்லியிருக்கிறார், இயக்குநர் சிக்கல் ராஜேஷ். வரம்பை மீறும் யூடியூபர்களை தண்டிக்க நினைத்தவர் அவர்களை கொடூரமாக கொல்கிறார்.
கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹேந்திரன், அறிமுக நடிகர் என்பது அவரது நடிப்பில் தெரிந்து விடுகிறது. ஒரு சில காட்சிகளில் பரவாயில்லை. ரேஷ்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நீமா ரே, கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருப்பதுடன், கவர்ச்சியும் காட்டுகிறார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிக்கல் ராஜேஷ், மிரட்டுகிறார். அவரை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. மற்றபடி நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன் ராஜ், அன்சி சிந்து ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். அஷ்மிதா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். பட்ஜெட் பற்றாக்குறை படமாக்களில் தெரிந்தாலும் மோசமில்லை என்ற அளவிற்கு இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் கவனத்தோடு படமாக்கியிருந்தால், ஒரு திகில் படத்தை பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும்.