‘இரவின் விழிகள்’ இத்திரைப்படத்தை மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில் மகேந்திரன் தயாரித்து வருகிறார். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கி வருகிறார். இரண்டு கதாநாயகர்கள் கொண்ட இத்திரைப்படத்தில், தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க ,மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்து வருகிறார். கதாநாயகியாக கன்னடத்தில் ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே, கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
‘இரவின் விழிகள்’ படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைக்க, பாஸ்கர் ஒளிப்பதிவை செய்திருக்க, கவனிக்க, ’விடுதலை’ படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.
‘இரவின் விழிகள்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில்.., இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசுகையில்,
“படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார். படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம். இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.
இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார். ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்றார்.
சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசுகையில், “இந்த படத்தில் நான் பாடியிருக்கும் பாடல் படத்தின் ஜானரை வெளியே இருப்பது போல கொஞ்சம் ஸ்டைலாக இருக்கும். இசையமைப்பாளரைப் பொருத்தவரை ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை அவர் உட்காரவே மாட்டார்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில்,
“சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.. நாங்களும் தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பும் படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் அங்கே போட்டியிட தமிழ் படம் எதுவும் தேர்வாகவில்லை என்பது வருத்தம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இடம்பெறுகின்றன. இங்கே தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ? சிறிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் படங்கள் எந்த திரையரங்குகளில் எந்த காட்சி ஓடுகிறது என்கிற தகவல் கூட தெரிவதில்லை.
என்னுடைய பொன்னுமணி படம் வெளியான காலத்தில் கூடவே 16 படங்கள் வெளியாகின. அதில் 12 படங்கள் வெற்றி பெற்றன. அது போன்று ஒரு காலம் வேண்டும், திருப்பிக் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைக்கிறோம். ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவியுங்கள்.
இப்போதும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தான் இந்த படம் பேசுகிறது. படத் தயாரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் பப்ளிசிட்டிக்கு இப்போது யாரும் கொடுப்பதில்லை. அதுவே மைனஸ் ஆக அமைந்து விடுகிறது. பல படங்கள் இசை வெளியீட்டு விழாவின்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறதா? என்பதே தெரிய வருகிறது. படத்தை மோசமாக விமர்சிக்கிறார்கள் என வலைதளக்காரர்களை திட்டுகிறோம். தப்பாக கூட நம் படத்தைத் திட்டுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்” என்றார்.
இசையமைப்பாளர் ஏ.எம் அசார் பேசுகையில்,
“இரவின் விழிகள் ஒரு அருமையான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பாடல்கள் ஐந்து விதமான ஜானரில் இருக்கும். அரவிந்த் அக்ரம் ஒரு முறை பாடல் எழுதிக் கொடுத்தார் என்றால் அதில் பெரும்பாலும் திருத்தமே இருக்காது. படத்தின் பாடல்களுக்கேற்ற விஷுவல்சும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.
நாயகி நீமா ரே பேசுகையில்,
“மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட் என்று இயக்குநர் ராஜேஷை சொல்லலாம். படப்பிடிப்பில் அவருக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக் கூட என்னை அழைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்.. அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவரைத் தொடர்பு கொண்ட போது ஹீரோவான அவரது காட்சிகளே கொஞ்சம் திருப்தி இல்லை என்று அதை மீண்டும் எடுப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்ஷன் பார்த்து பார்த்து இரவின் விழிகள் படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரை பார்க்கும்போது எல்லாம் அந்நியன் படம் தான் ஞாபகத்திற்கு வரும். படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்” என்றார்.
தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசுகையில்,
“வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார்.
ஒரு நாள் காலை சாப்பாடு கூட சாப்பிட விடாமல் என்னை வைத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.