‘வரம் சினிமாஸ்’ சார்பில், வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் தயாரித்து, ரஞ்சித், மெகாலி மீனாட்சி, விட்டல் ராவ், மௌனிகா, நீலேஷ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், இறுதி முயற்சி. எழுதி இயக்கியிருக்கிறார், வெங்கட் ஜனா.
ஒளிப்பதிவு – சூர்யகாந்தி. இசை – சுனில் லாசர்.
ஜவுளி வியாபாரம் செய்து வரும் நாயகன் ரஞ்சித், வியாபாரத்திற்காகவும், மகனின் மருத்துவ செலவுக்காகவும், கந்துவட்டி தாதா விட்டல் ராவ்விடம் கடன் வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டிய நிலையில், அவர்களது வீட்டுக்குள்ளேயே சிறைபிடிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், போலீசிடம் சிக்காமல், சீரியல் சைக்கோ கில்லர் ரஞ்சித்தின் வீட்டிற்குள் புகுந்து விடுகிறார். ரஞ்சித், கந்து வட்டி கும்பலிடமிருந்து தப்பிக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். அது என்ன? சைக்கோ கில்லர் என்ன ஆனான்? என்பது தான், இறுதி முயற்சி.
மகன், மகள், மனைவி ஆகியோருடன், கடன்பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் ஒரு சராசரி குடும்பத்தலவனின் வேதனையையும், வலியையும் பார்வையாளர்களிடத்தில் சிறப்பாக கடத்தியிருக்கிறார். அவரது எளிமையான நடிப்பு, சில ரசிகர்களின் கண்களை கசிய வைத்து விடுகிறது.
ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி, அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து, குடும்பத்தலைவியாக நடித்து, சிறப்பு சேர்க்கிறார்.
கந்துவட்டி தாதாவாக நடித்திருக்கும் விட்டல் ராவ், மிரட்டல்!
புதுபேட்டை சுரேஷ், கதிரவன், சிறுமி மெளனிகா, சிறுவன் நீலேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும், அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுனில் லாசரின் இசையும், ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தியின் ஒளிப்பதிவும் ஓகே!
எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் ஜனா, கந்துவட்டி குறித்த அநியாயங்களை அப்பட்டமாக, எளிதான திரைக்கதை மூலம் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சோகமான காட்சிகளை கொஞ்சம் தவிர்த்து, திரைக்கதையில் கூடுதல் விறுவிறுப்பினை சேர்த்திருந்தால், நல்ல முயற்சியாக இருந்திருக்கும், இந்த இறுதி முயற்சி!