யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி , பாத்மென், யோகி , சாய்தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ஜாக்கி. ‘கே 7 ஸ்டுடியோ’ சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ், சி. தேவதாஸ், ஜெயா தேவதாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். எழுதி, இயக்கியுள்ளார் டாக்டர் பிரகபல். இசையமைத்திருக்கிறார், சக்தி பாலாஜி, பி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார், என் எஸ் உதயகுமார்.
மதுரை ஒத்தக்கடை தான் கதைக்களம். கிடா சண்டையும் அதை சுற்றி நடக்கும் வெட்டு குத்தும் தான் ஜாக்கி திரைப்படத்தின் கதை. இது போதாதா, ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு! ஒரு சின்ன பட்ஜெட்டில் சுவாரசியமான கிடா சண்டைபோட்டியை பரபரப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் பிரகபல்.
ஷேர் ஆட்டோ ஓட்டிவரும் நாயகன் யுவன் கிருஷ்ணா. அவரது கிடாவின் மேல் அளவற்ற பிரியம் கொண்டுள்ளதுடன், அதை குடும்பத்தில் ஒருவராக பாவித்து வருகிறார். அவ்வப்போது அந்தக்கிடாயை, கிடா சண்டை ப் போட்டியிலும் கலந்து கொள்ளச்செய்கிறார்.
மதுரையில் மீன் வியாபாரம் செய்துவரும் தாதா ரிதன் கிருஷ்ணா. இவருக்கும் கிடா சண்டையில் அலாதி பிரியம் கொண்டவர். போட்டியில் தன்னுடைய கிடா மட்டுமே ஜெயிக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர்.
மதுரையில் நடக்கும் ஒரு கிடா சண்டையில், ரிதன் கிருஷ்ணாவின் கிடாவினை, யுவன் கிருஷ்ணாவின் கிடா தோற்கடித்து விடுகிறது. இதனால், கடும் அவமானம் அடையும் ரிதன் கிருஷ்ணா, யுவன் கிருஷ்ணாவை பழித்தீர்க்கத்துடிக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் பகை முற்றுகிறது.
இவர்களுடைய பிரச்சனையை முடித்து வைக்க ஊர்ப்பெரியவர் மதுசூதன் ராவ், மீண்டும் ஒரு கிடா சண்டைப்போட்டி நடத்துகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஜாக்கி திரைப்படம்.
யுவன் கிருஷ்ணாவும் , ரிதன் கிருஷ்ணாசும் மோதும் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. கதைக்களத்திற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் வன்முறை. தோற்றுப்போன கிடாவை வெட்டும் காட்சியில் ரிதன் கிருஷ்ணாவின் வில்லத்தனம் அபாரம். அகங்காரத்தையும், தோல்வியை தாங்கமுடியாத மனிதனாக, ஆனவத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
நாயகன் யுவன் கிருஷ்ணா ஆட்டின் மீது பாசம் கொண்டவராக போட்டியை போட்டியாக கருதும் மனநிலை கொண்டவராக அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். அம்மு அபிராமியை காதலிக்குக் காட்சிகளிலும் சபாஷ் போடவைக்கிறார்.
அம்மு அபிராமி, யுவனை காதலிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும் குறிப்பிடும்படி நடித்துள்ளார். மதுசூதன் ராவ், ஊர்ப்பெரியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றம் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது. சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத் மென்,யோகி , சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா போன்றோரும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
கிடாக்கள் மோதிக் கொள்ளும் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் என் .எஸ் உதயகுமார். இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் பின்னணியும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. கிடா சண்டைக்காட்சிகளை பரபரப்பாக தொகுத்திருக்கிறார், படத்தொகுப்பாளர் என் பி ஸ்ரீகாந்த். கிடா சண்டையைப் பற்றிய இப்படம் ஆக்ஷன் பிரியர்களுக்கானது.