Jackpot Movie Review

பிரபுதேவா, ஹன்ஸிகா மோத்வானி நடித்த ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியிருக்கும் படம் ‘ஜாக்பாட்’. ஜோதிகா, ரேவதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்க ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருக்கிறார்.

பெண்களை முன்னிறுத்தும் படங்களில் நடித்துவந்த ஜோதிகா முதன்முறையாக முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடித்திருக்கிறார். சிரிக்க வைக்கிறாரா? பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏழை பால் வியாபாரியிடம் ‘அட்சய பாத்திரம்’ ஒன்று கிடைக்கிறது. அதை பயண்படுத்தி அவர் பெரிய செல்வந்தர் ஆகிறார். அவரிடம் இருந்து திருடு போகும் அந்த அட்சய பாத்திரம் இட்லிக்கடை வைத்திருக்கும் சச்சுவிடம் கிடைக்கிறது. அதை பயண்படுத்தி பணம் வரவழைக்கும் அவர் போலீஸில் சிக்கி ஜெயிலுக்கு செல்கிறார்.

சின்ன சின்ன மோசடி, திருட்டுகளில் ஈடுபட்டுவரும் ஜோதிகாவும், ரேவதியும் ஜெயிலுக்கு செல்லும்போது சச்சுவின் நட்பு கிடைக்கிறது. அவர்களிடம் சச்சு ‘அட்சய பாத்திரம்’ பற்றி சொல்ல வெளியே வரும் ஜோதிகாவும், ரேவதியும் அதை தேடி செல்லும் போது நடக்கும் காமெடி களேபரங்கள் தான் ‘ஜாக் பாட்’ படத்தின் திரைக்கதை.

‘ஜாக் பாட்’ தலைப்பிற்கு பதில் ‘குலேபகாவலி 2’ என வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சீரியசான படங்களில் நடித்த ஜோதிகா இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் ரவுண்டு கட்டி அடித்துள்ளார். அவருடைய குறும்பு சேட்டைகள், தெனாவெட்டு பேச்சு, ஆக்ஷன் என அவரது ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார். ரேவதி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ரேவதியும், ஜோதிகாவும் போடும் ஆட்டம் செம்ம!!!

ரேவதியை ஒன் சைடாக காதலிக்கும் மொட்டை ராஜேந்திரன் கையில் ஒற்றை சிவப்பு ரோஜாவுடன் சுற்றி வரும் காட்சிகள், ரேவதிக்கு உதவும் காட்சிகள் மரண மாஸ்!!! சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் யோகி பாபு காமெடி பஞ்ச் ஓரளவுக்கு தான் ரசிக்க முடிகிறது.

டபுள் ஆக்ஷனில் வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஆனந்த ராஜ். அதுவும் பெண் வேடத்தில் வரும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவைக்கிறது. அதையே இன்னும் கொஞ்சம் டெவெலப் செய்திருந்தால் அன்லிமிடெட் அட்டகாசமாக இருந்திருக்கும்.

ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே இலக்காக கொண்ட இயக்குநர் கல்யாண், லாஜிக்கை பற்றி கவலைப்படாமல் காட்சிகளை அமைத்துள்ளார். அதனால் சில இடங்களில் சிரிக்க முடியவில்லை.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் ஒகே! அதே நேரத்தில் பின்னணி இசையின் சத்தம் அதிகமாக இருக்கிறது. சத்தத்தை குறைத்திருந்தால் ரசிக்கும் படியிருந்திருக்கும்.

‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.
பெரும் நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கல்யாண் சமுத்திரக்கனி உள்ளிட்ட சிலரை முழுமையாக பயண்படுத்தவில்லை என்பது குறை.

மனோபாலாவின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட், படம் முடிந்த நிலையில் ரன்னிங் ஸ்க்ரோலில் வருவதை தவிர்த்திருக்கலாம். பள்ளிக் கல்விக் கட்டண உயர்வை காரணம் காட்டி கொள்ளையடிப்பது கொஞ்சம் ஓவர்!

லாஜிக்கை மறந்து மேஜிக் செய்திருக்கிறார்கள்… ரசிக்கலாம்!