‘ஜெய் பீம்’ : விமர்சனம்.

‘முதனை’ கிராமம், இது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ‘கம்மாபுரம்’ ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் ‘இருளர்’ இன மூதாட்டி பார்வதி(75). இவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்டே ‘ஜெய் பீம்’ உருவாகியுள்ளது.

முதன்மை கதாபாத்திரங்களாக மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உட்பட, பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.

வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. எப்படியிருக்கிறது? ‘ஜெய் பீம்’.

ஒரு வீட்டிற்குள் புகுந்த பாம்பினைப் பிடிக்க வரவழைக்கப்படுகிறார் மணிகண்டன். அவர் பாம்புப் பிடித்துச் சென்ற அடுத்த நாள் அந்த வீட்டில் கொள்ளை நடக்கிறது. செல்வாக்கு மிகுந்த அந்த வீட்டுக்காரர் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு பிரஷர் கொடுக்கிறார். அதே பிரஷர் இரு மடங்காக லோக்கல் ஸ்டேஷன் எஸ்.ஐ. தமிழுக்கு திரும்புகிறது.

இதனால் மணிகண்டனுடன் அவரது உறவினர்கள் சிலரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படுகிறார்கள். அங்கே அவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அவர்கள் தப்பித்து ஓடியதாக போலீஸ் தேட ஆரம்பிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘ஜெய் பீம்’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்த அடுத்தடுத்த காட்சிகளின் தொகுப்பு அதிரவைக்கிறது. விடுதலையாகி வெளியே வருபவர்களை ஜெயில் வாசலிலேயே பங்குபோட்டு பொய் வழக்குப் போடும் காட்சி, ஜெயிலில் நடக்கும் சித்ரவதை காட்சி, போன்றவை போலீஸ் அரஜாகத்தின் உச்சத்தை காட்டுகிறது.  இதுபோல் போலீஸ் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்!!

பாதிக்கப்பட்ட இருளர்களின் வாழ்வியலை சொல்லும்போது அது ஆவணப்படமாக மாறும் வாய்ப்புக்கள் வந்துவிடும். ஆனால் பா.கிருத்திகாவின் திரைக்கதை, ஆரம்பம் முதல் இறுதிவரை நெஞ்சம் தடதடக்க ஒரே நேர்க்கோட்டில் பயனிக்கிறது. அடுத்தடுத்த எதிர்பாரத திருப்பங்களால் ஒரு விறுவிறுப்பான திரில்லர் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. மர்ம முடிச்சுக்கள் அவிழும் காட்சிகளில் பிலோமின் ராஜின் எடிட்டிங் சூப்பர். திரைக்கதையைப் போலவே எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்தின் சிறப்பினை மேம்படுத்துகிறது. அதிலும் ‘ஸ்க்ரோலிங் டைட்டில்’ போடும்போது இடம்பெறும் இசை இன்டர் நேஷனல் லெவல்!

கதாநாயகன் மணிகண்டன், மிகச்சரியான தேர்வு. நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ், இருளர் இனப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். மணிகண்டனுடன் வயலில் ‘எலி’ பிடிக்கும்போது செய்யும் ரொமேன்ஸ் காட்சியிலும், போலீஸ் கொதறிப்போட்ட கணவனை பார்த்து அழுவதிலும், தனிப்பட்ட நடிப்பினை கொடுத்துள்ளார்.

சூர்யா, பிரகாஷ்ராஜ் சிலகாட்சிகளில் சந்தித்துக்கொண்டாலும் அந்தக்காட்சிகள் அழுத்தமானவை. பிரகாஷ்ராஜ் கண்களினாலேயே வசனம் பேசுகிறார்.

மாநில அரசின் ‘தலைமை’ வழக்கறிஞராக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் பெர்ஃபெக்ட்!. குருசோமசுந்தரம், அரசு வழக்கறிஞர்களை அப்படியே இமிட்டேட் செய்திருக்கிறார். அதேபோல் நீதிபதிகளாக வருபவர்களும். ஒரு தீர்ப்பின் போது சூர்யாவை பாராட்ட, நீதிபதி தன்னுடைய பேனாவின் பின் முனையால், மேஜையில் தட்டி பாராட்டு தெரிவிப்பது, சிறப்பு! இப்படிப் படத்தில் நடித்துள்ள பலரும் அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சினிமாவில் பல கோர்ட்டுகள் காண்பிக்கப்பட்டிருந்தாலும் இந்தக்கோர்ட் நம்பகத் தன்மையுடன் இருக்கிறது.

எஃபெக்ட்ஸ், லோ ஆங்கிள், டாப் ஆங்கிள், பில்டப் ஷாட்ஸ் இத்யாதி.. தயவுகளினால் மட்டுமே காலம் தள்ளும் நடிகர்களுக்கு மத்தியில், அவ்வப்போது சூர்யா இப்படிப்பட்ட படங்களில் நடிப்பது பாராட்டுக்குரியது. படம் முழுவதும் அசத்தியிருக்கிறார்.

காவல் துறையில் எதேச்சை அதிகாரம் கொண்டு செயல்படும் சிலருக்காக, அரசு இயந்திரம் என்னவெல்லாம் செய்யும் என்பதை தெரியாதவர்களுக்கு தெரியப் படுத்தி இருக்கிறார்கள்.

மிகப்பெரிய ஒரு விஷயத்தை, சமூக பொறுப்புடன் படமாக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் பாராட்டுக்குரியவர்.

‘ஜெய் பீம்’ படத்தினை தயாரித்த ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், பெருமை பெறும்.

தமிழ்ச்சினிமாவின் தவிர்க்கமுடியாத படங்களுடன் ‘ஜெய் பீம்’ இணைகிறது.  அனைவரும் பார்க்க வேண்டிய  படம்.

‘ஜெய் பீம்’ படத்தின் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.