லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம், ‘ஜமா’. இதில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஜமா’ திரைப்படம் முற்றிலும் புதிதான கதைக்களத்துடன் வந்துள்ளது. இது தெருக்கூத்தினையும், அதன் கலைஞர்களை பற்றியும் பேசியிருக்கிறது. இதற்கு முன்னர், நடிகர் நாசர் இயக்கத்தில் வெளியான அவதாரம், உள்ளிட்ட வேறு சில படங்கள் ‘தெருக்கூத்து’ பற்றி பேசியிருந்தாலும், ஜமா அவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
வட தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் இருக்கும் சிறிய கிராமம், ‘புரிசை’. இங்கு, 150 வருடங்களாக தெருக்கூத்தினை நடத்தி வருகிறார்கள்.
தெருக்கூத்து முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் குறிப்பாக புரிசை,செஞ்சி பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தோன்றியதாக கூறப்படுவது உண்டு. அது பின்னர் தென் தமிழகத்தில் பரவி, இலங்கை வரை சென்றிருந்தது. வெளி நாடுகளிலிருந்து பலர் புரிசை கிராமத்திற்கு வந்து இந்த தெருக்கூத்து கலையை கற்றும் உள்ளனர். அழியும் தருவாயில் இருந்த தெருக்கூத்துக் கலையை மீட்டெடுத்தவர், புரிசையை சேர்ந்த புரிசை கண்ணப்ப சம்பந்தன்.
‘ஜமாத்’ என்ற உருது வார்த்தையில் இருந்து தோன்றியது தான் ஜமா. ஜமா என்றால் ஒரு குழு என்று பொருள். தெருக்கூத்து நடத்துபவர்கள் இந்த வார்த்தையை அதிகம் பயன் படுத்தினர். இதை பற்றி பேச இன்னும் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அதனால், ஜமா திரைப்படத்தின் கதைக்கு செல்வோம்.
அம்மு அபிராமியின் அப்பா சேத்தன், ஒரு தெருக்கூத்து வாத்தியார். அவர் ஒரு ஜமா நடத்தி வருகிறார். அந்த ஜமாவில், பெண் வேடமிட்டு நடித்து வருபவர் பாரி இளவழகன். பெரும்பாலும் பெண்வேடமிட்டு வரும் இவரது பாவனைகள் பெண் மாதிரியாகவே இருக்கிறது. இவரது அம்மா கே.வி.என் மணிமேகலை இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஆண் வேடமிட்டு நடிக்க நிர்பந்திக்கிறார். அம்மு அபிராமியும் பாரி இளவழகனும் காதலித்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார், சேத்தன். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், ஜமா படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் பாரி இளவழகன், தெருக்கூத்தில் நடக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையை பேசியிருப்பது பாராட்டுக்குரியது. அதாவது, பெண் வேடமிட்டு நடிக்கும் கலைஞர்களின் துயரத்தினை பேசியிருக்கிறார். தெருக்கூத்தில் பெண்கள் நடிப்பதில்லை. அதனால், ஆண்களே பெண்வேடமிட்டு நடிக்கின்றனர். மேலும் இவர்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. காலப்போக்கில், இப்படி பெண்வேடமிட்டு நடிப்பவர்களிடையே, பெண்களிடம் கானப்படும் நளினமும் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சமூகத்தின் பரிகாசத்திற்கு ஆளாகின்றனர். இதை அழகாக படமாக்கியிருக்கிறார், இயக்குநர் பாரி இளவழகன். அதேபோல், தெருக்கூத்து கலைஞர்களிடையே இருக்கும் அல்டிமேட் கனவு லட்சியம் எல்லாமே, மகாபாரதக் காப்பியத்தில் இடம்பெற்ற அர்ஜூனனின் வேடமிட்டு நடிப்பதும், ஜமாவின் தலைவனாக ஆவதும் தான். ஆண் வேடமிட்டு நடிப்பவர்களாலேயே எளிதில் சாதிக்க முடியாததை, பெண் வேடமிட்டு நடிப்பவர்கள் முடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், என்பதை உணர்வு பூர்வமாக, அழகாக சொல்லியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருப்பதோடு, கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், ‘கல்யாணம்’ என்ற கதாபாத்திரத்தில் அப்பாவியாகவும், பெண்வேடமிட்டு நடிக்கும் காட்சிகளிலும், அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளிலும், அம்மாவுடன் தர்க்கமிடும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸில் மகாபாரதக் காப்பியத்தில் இடம் பெற்ற ‘குந்தி’யாக நடிக்கும் காட்சியிலும் அவரது உடல் மொழி சிறப்பாக இருக்கிறது. ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.
தெருக்கூத்து வாத்தியாராக நடித்திருக்கிறார், சேத்தன். குறுக்குபுத்தியும் கெட்ட எண்ணம் கொண்டவராக ‘தாண்டவம்’ என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தினை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். இதற்கு முன் இவரை திரைப்படங்களில் பார்த்திராதவர்கள், இவரை ஒரு உண்மையான கூத்துக்கலைஞராக நினைத்து கொள்வர். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்துள்ளார்.
எதற்கும் துணிந்து நிற்கும் கதாபாத்திரம் அம்மு அபிராமிக்கு. ‘ஜெகதாம்பிகா’ என்ற கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். பாரி இளவழகனை சுற்றி வரும் காட்சியிலும், அப்பா, சேத்தனை கண்ணத்தில் அறையும் காட்சியிலும் தனிக்கவனம் பெறுகிறார்.
பாரி இளவழகனின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், ‘பூனை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, சிவமாறன், காலா குமார், ஏ கே இளவழகன் ஆகியோர் கதாபாத்திரத்திரங்களுக்கேற்ற பொருத்தமான தேர்வு.
இவர்கள் எல்லோரையும் விட, பாரி இளவழகனின் அம்மாவாக நடித்திருக்கும் கே.வி.என் மணிமேகலை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே! தெருக்கூத்து நடைபெறும் காட்சிகள், லைவ் சவுண்டில் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு நேர்த்தி!
மொத்தத்தில், ரசிக்கும்படியாக ‘ஜமா’ திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் பாரி இளவழகன்.