‘ஜமா’ திரைப்படம், விருதுகளை அள்ளுமா, பணத்தை அள்ளுமா?

‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்த ‘லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ்’ (Learn & Teach Productions) நிறுவனத்தின் சார்பில் உருவாகியிருக்கும் படம், ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில், இதுவரை சொல்லப்படாத அப்பட்டமான அவர்களது வாழ்க்கையை சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார், தெருக்கூத்து கலைஞர்களின் வம்சா வழியில் வந்த, ‘ஜமா’ திரைப்படத்தில் நடித்து, எழுதி, இயக்கிய அறிமுக இயக்குநர் பாரி இளவழகன்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகனுடன், முக்கிய கதாபாத்திரத்தில் சேத்தன் நடித்திருக்க, அவர்களுடன் இப்படத்தில் அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘ஜமா’ படத்தின் டிரைலர் வெளியான நிலையில், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, நடிகர் சேத்தனின் நடிப்பு குறித்து பலர் பாராட்டுவதுடன், அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஜமா திரைப்படம் குறித்து இயக்குநர் பாரி இளவழகன் கூறியிருப்பதாவது..

‘’திரைப்படங்கள், குறும்படங்களில் ‘தெருக்கூத்து’ கலைஞர்கள் பற்றி தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதாவது தெருக்கூத்து அழிந்து வருவதாகவும், அந்தக்கலைஞர்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது தவறு. ‘எனது ஊரில்,  பல உறவினர்கள் இன்னமும் தெருக்குத்கூத்து கலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிஜத்தை அப்படியே சொல்லவேண்டுமென்பதால், இந்தக் கதையை உருவாக்கினேன். தெருக்கூத்து கலைஞர்களின் முக்கியமான பிரச்சனை என்றால், ஆண் கலைஞர்கள் பெண் வேடம் போடும் போது எதிர்கொள்ளும் பிரச்சனை தான். சொந்த ஊரிலேயே கேலி, கிண்டலுக்கு ஆளாவார்கள். இதை முக்கிய கருவாக கொண்டு, நிஜமாகவும், எதார்த்தமாகவும் சொல்லும் பொழுது போக்கு படமே, ‘ஜமா’.

‘ஜமா, என்பது ஒரு குழுவையோ, ஒரு கூடத்தையோ குறிக்கும் சொல். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தெருக்கூத்து ஜமாவில், தலைமை பொறுப்பேற்க நினைக்கும் பெண்வேடமிட்டு நடிக்கும், ஒருவனது வாழ்க்கையை சுற்றி நடக்கும் சம்பவங்களே, திரைக்கதை. ‘

‘சேத்தன் சார், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் படத்தை பார்த்தால், அவரை, ஒரு நிஜமான தெருக்கூத்து கலைஞராக நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு நடித்துள்ளார். இது படத்திற்கான ஒரு பலமாக அமைந்துள்ளது.

தெருக்கூத்து கலை உள்ளிட்ட, மற்ற கலைஞர்களின் வாழ்வியல் பற்றி அதிகம் தெரிந்திருப்பவர் இளையராஜா. அதற்கான இசையை அவர் மட்டுமே கொடுக்க முடியும் என நம்பினேன், விரும்பினேன். பாடல்களும், பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

‘ஜமா’  திரைப்படம் தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி பேசியிருந்தாலும், அது ஜனரஞ்சகமாக உருவாக்கப்பட்டிருப்பதால், அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.’’ என்றார்.