3 தலைமுறைகளின் கதையைப் பேசும் ‘ஜெயராம் – சிம்ரன்’ புதிய படம்!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்முறையாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மைக் கதாபாத்திரங்களில் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாப் பூஜை, நேற்று சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் படக்குழுவினர் மற்றும் முன்னணித் திரை பிரபலங்களின் பங்கேற்புடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

‘ராட்சசி’ மற்றும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற முற்போக்கான சமூகத் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் SY கௌதம்ராஜ் இத்திரைப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். இக்கதை முற்றிலும் மாறுபட்ட ஒரு கலகலப்பான நடுத்தரக் குடும்பப் பின்னணியைக் கொண்ட ஃபேமிலி ரொமாண்டிக்-காமெடி (Family Rom-Com) எண்டர்டெய்னராக வடிவமைக்கப்பட்டுள்ளது.பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ண ஓட்டங்கள், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களுக்கு இடையே நிலவும் புரிதல் சவால்களை மிகவும் எதார்த்தமான நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகிய மூன்று வெவ்வேறான காலகட்டத்து மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைத்துத் தரப்பு குடும்ப ரசிகர்களும் தியேட்டர்களில் ஒன்றாக அமர்ந்து ரசித்துக் கொண்டாடும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரனுடன் இணைந்து, இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் ஒட்டுமொத்தத் திரையுலகையும் உற்று நோக்க வைத்த திறமைமிகு குழந்தை நட்சத்திரம் பொன்வேல் ஒரு மிக முக்கியமான முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ் மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

‘தேஜாவு’ மற்றும் ‘வித்தைகாரன்’ படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தின் பூஜை விழா மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைத்துறையிலிருந்து தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார் கதிரேசன், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் (Drumsticks Productions) தயாரிப்பாளர் விவேக், சாந்தி டாக்கீஸ் (Shanthi Talkies) தயாரிப்பாளர் அருண் விஷ்வா, ஸ்டோன் பெஞ்ச் (Stone Bench) தயாரிப்பாளர் கார்த்திகேயன், முன்னணி இயக்குநர் எச். வினோத் மற்றும் நடிகர் நட்டி (நடராஜ்) ஆகியோர் நேரில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தலைப்புச் செய்திகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.