’J பேபி’ –  விமர்சனம்!

இந்திய ராணுவ வீரரான சேகர் நாராயணன், வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவமே, ’J பேபி’ திரைப்படத்தின் கதை. அதில் சில கற்பனைகள் கலந்து, சுரேஷ் மாரி இயக்கியுள்ள இப்படத்தினை, ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ சார்பில், பா ரஞ்சித் தயாரித்திருக்கிறார். இதில், ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சதீதா ராய், மாயா ஸ்ரீ  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

J  பேபியின் மகன்களான (ஊர்வசி) செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவரும் தினக்கூலிகள். ஒரு ஆள் J பேபி,  ரயிலில் ஏறி, தவறுதலாக கொல்கத்தா சென்று விடுகிறார். பாஷை தெரியாமல் தவிக்கும் அவரை, இந்திய ராணுவ வீரரான சேகர் நாராயணன் மீட்டு, தமிழ்நாடு போலீஸூக்கு தகவல் தெரிவிக்கிறார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து செந்தில், சங்கர் இருவரையும் அழைத்து, கண்டிப்பதுடன் J  பேபியை போய் அழைத்துவர சொல்கின்றனர். இருவரும் கொல்கத்தாவில் அவர் இருக்கும் இடத்திற்கு செல்கின்றனர்.  அப்போது மீண்டும் J  பேபி காணாமல் போகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே மனித உறவுகளின் உணர்ச்சிமிக்க, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

அவ்வப்போது, புத்தி சுவாதீன தடுமாற்றம் ஏற்படும் கதாபாத்திரம் ஊர்வசிக்கு ( J  பேபி), அதை உணர்ந்து, இயல்பாக, மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். தனது மகன்களான மாறன், தினேஷ் இருவரையும் நைனா… நைனா.. என அழைத்து பாசத்துடன் பேசும் காட்சிகள், மன நல மருத்துவமனையில் சேர்த்து விட்டதால் கோபப்பட்டு கல்லை எடுத்து தாக்க முயற்சிக்கும் காட்சிகள், தினேஷை பார்த்தபடியே, . “நானா நைனா உன்ன அடிச்சேன்வ்.., நீ தானே அடிச்சே.. என பேசும் காட்சிகள், இரவு நேரத்தில் தூங்கும் போலீஸை எழுப்பி வம்பிழுக்கும் காட்சிகள் என படம் முழுவதும், அந்த கதாபாத்திரத்திற்கேற்ற உணர்வுகளை, சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார்.

ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் போடும் கவுன்ட்டர் காமெடி சிரிப்பினை ஏற்படுத்துகிறது.. மிலிட்டரி குவார்ட்டஸில் சரக்கு திருடும் காட்சி, தம்பி தினேஷுடனான முரண்பாடு உள்ளிட்ட பல காட்சிகளிலும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், தொப்பை வயிறுடன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். தன்னையும் தனது மனைவி இஸ்மத் பானுவையும், வீட்டை விட்டு விலக்கி வைத்திருப்பது பற்றி பேசும் காட்சிகளில், மனதை நெருடுகிறார்.

ஊர்வசியின் மகள்களாக நடித்திருக்கும் மெலடி டார்கஸ்,  தாட்சாயிணி, தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, மாறனின் மனைவியாக நடித்திருக்கும் சபீதா ராய் என அனைவருமே கதாபாத்திரங்களாகவே, இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

உண்மை சம்பவத்தில் பேபியம்மாவை கொல்கத்தாவில் காப்பாற்றி, அவர்களுடைய பிள்ளைகளிடம் சேர்த்த ராணுவ வீரரான சேகர் நாராயணன், அதே கதாபாத்திரத்தில் படத்திலும் நடித்திருக்கிறார், சிறப்பு.

ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

டோனி பிரிட்டோவின் இசை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். பல இடங்களில் காட்சிகளுடன் ஒன்றாமல் இருக்கிறது.

ஓரு உண்மைச் சம்பவத்தை, கற்பனைகள் கலந்து நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார், இயக்குநர், சுரேஷ் மாரி.