‘ஜென்ம நட்சத்திரம்’ – விமர்சனம்!

‘அமோகம் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வைட் லேம்ப் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள திரைப்படம், ஜென்ம நட்சத்திரம். தமன், மால்வி மல்கோத்ரா, வேல.ராமமூர்த்தி, காளி வெங்கெட், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்க, மணிவர்மன் இயக்கியுள்ளார்.

நாயகன் தமன், சினிமா வாய்ப்புத் தேடி வருகிறார். நாயகி மால்வி மல்கோத்ரா, தமனின் மனைவி. அவரது கனவில் தோன்றும் அம்மாவும் மகளும், மால்வி மல்கோத்ராவை தற்கொலை செய்யத் தூண்டுகின்றனர். சினிமா வாய்ப்புத்தேடி வெளியூர் செல்கிறார், தமன். இந்நிலையில், தமனின் மனைவி, மால்வி மல்கோத்ரா நண்பர் வீட்டில் தங்குகிறார். அப்போது காளி வெங்கெட் சிலரால் வெட்டப்பட்டு, உயிருக்கு போராடியபடி, அந்த வீட்டிற்குள் வந்து அவரது மகளை காப்பாற்றும்படியும். அவரால் மறைத்து வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் ரகசியத்தையும் சொல்லி உயிரை விடுகிறார். வீட்டிற்கு திரும்பும் தமன், மற்றும் நண்பர்கள் காளி வெங்கெட்டின் மகளை காப்பாற்றவும், பணம் இருக்கும் அந்த ரகசிய இடத்திற்கும் செல்கின்றனர்.

அப்போது அமானுஷ்யமான முறையில், ஓவ்வொருவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். தமனும், மால்வி மல்கோத்ராவும் எஞ்சிய நிலையில், அவர்கள் தப்பித்தார்களா? பணத்தைக் கைப்பற்றி, காளி வெங்கெட்டின் மகளை காப்பாற்றினார்களா, இல்லையா? என்பது தான், ’ஜென்ம நட்சத்திரம்’.

1970 ஆண்டு வந்த ஓமன் படத்தின் இன்னொரு வெர்ஷன் தான் இந்தப்படம். இந்த மாதிரியான படங்கள் தமிழில் ஏராளமாக வந்துவிட்டன. அதே கதைக்களம், திரைக்கதை என்பதால் போரடிக்கிறது. ஒரு சில காட்சிகள் மட்டுமே திடுக்கிட வைக்கிறது. சூப்பர் நேச்சுரல், க்ரைம் இரண்டையும் அழகாக இணைத்த இயக்குநர் மணிவர்மன், அதை தெளிவாக சொல்லவில்லை என்பதால், ரசிகர்களால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. க்ளைமாக்ஸ், அடுத்த பாகத்தை நோக்கிச்செல்கிறது.

தமன், அவரது மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா, தமனின் நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா, ரக்‌ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி ஆகிய அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

முனீஷ்காந்த், யாசர் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் கே.ஜி ரசிகர்களை மிரட்டுகிறார். இரவு நேரக்காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை, திகில் காட்சிகளுக்கு மெருகு ஏற்றுகிறது.

இயக்குநர் பி.மணிவர்மன், சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லை! அதனால் ரசிக்க முடியவில்லை!

‘ஜென்ம நட்சத்திரம்’ –  சுவாரசியமற்ற பழைய கதை!