‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – விமர்சனம்!

அரசியல்வாதி இளவரசுவின் கைத்தடி, பிரபல ரௌடி, ராகவா லாரன்ஸ். அவரை, இன்னொரு அரசியல்வாதியான ஷைன் டாம் சாக்கோ, கொல்லத் துடிக்கிறார். இதனால், ராகவா லாரன்ஸை கொல்வதற்கு, எஸ்.ஜே.சூர்யா நிர்பந்தப் படுத்தப்படுகிறார். கொலை நடந்ததா, இல்லையா? என்பதே  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

ரௌடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தோற்றத்தில் ஒகேவாக இருந்தாலும், நடிப்பில் பெரிதாக கவரவில்லை! ஆனால், வழக்கமான பாணியிலிருந்து விலகி, நடித்திருப்பது ஆறுதல். ஒரு சில மாண்டேஜூகளில் சொல்லி முடிக்கப்பட வேண்டிய இவரது கதாபாத்திரத்தை, இடைவேளை வரை நீட்டியிருப்பதால், அயற்சி ஏற்படுகிறது.

ராகவா லாரன்ஸை கொலை செய்ய நினைக்கும், பயந்த சுபாவம் கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. பயந்த சுபவம் கொண்ட அவர், எதன் காரணமாக வீரம் பெறுகிறார், என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ராகவா லாரன்ஸிடம், இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் காட்சியில், எஸ் ஜே சூர்யா தன்னுடைய ‘அக்மார்க்’ பெர்ஃபார்மன்ஸை, அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், எஸ் ஜே சூர்யாவை சரியாக பயன்படுத்தவில்லை! என்றே தோன்றுகிறது.

லாரன்ஸின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், பழங்குடிப் பெண் வேடத்தில், பாந்தமாக பொருந்துகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்.

நடிகர், நடிகைகளில்  காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நவீன்சந்திரா, அமைச்சராக நடித்திருக்கும் இளவரசு, இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

டெக்னிக்கல் சைடில், மியூசிக், கேமிரா, கிராபிக்ஸ் ஆகியவை மிகச் சிறப்பாக இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகள்  வலம் வரும் காட்சியும், அதற்கேற்ற ,மியுசிக்கும் காட்சிகளை ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையில், பாடல்கள் பெரிதாக மனம் கவராத நிலையில், அவரது பிஜிஎம், முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை, சூப்பராக இருக்கிறது.

மறைந்த, உயிருடன் வாழும் அரசியல்வாதிகளை  மறைமுகமாக சித்தரித்தது, ஏன்? என்று தெரியவில்லை!

அரசியல் அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் சாமான்ய மக்கள் எப்படி பலி கொடுக்கப்படுகிறார்கள், என்பதை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மூலம் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.