‘செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு’ ஜீவி 2 ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார் குஷி!

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட்-19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019ல் வெளியாகி புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்திலும் தொடர்ந்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, படத்திற்கு முதல் பாகத்தை போலவே ரசிகர்களின் வரவேற்புடன் பாசிடிவான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பிரவீண் குமார் தனது அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

முதல் படத்தில் பணியாற்றும்போதே இந்த பரிசோதனை முயற்சி ஒர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகம் இருந்துச்சு. அதுல எதுனா புதுசா ட்ரை பண்ணலாம்னு பண்ணினோம். செமையா ஒர்க் அவுட் ஆகிருச்சு. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இடம்பெற்றுள்ன. அதையெல்லாம் 23 நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய சவால். நிறைய லொக்கேஷன், நிறைய இடம், நிறைய பயணம் இந்தப் படத்துக்கு தேவைப்பட்டது

ஸ்க்ரிப்ட்டை படித்தாலே பயங்கரமாக இருந்தது. முதல் பாகத்தில் இருந்த விஷயங்களை இரண்டாம் பாகத்தில் கனெக்ட் செய்திருந்த விதம் ஆச்சர்யமூட்டியது.

முக்கோண விதி, தொடர்பியல் இவையெல்லாமே தேஜாவு கான்செப்ட் தானே.. இதுக்கு முன்னடி நமக்கு எப்போதோ நடந்த மாதிரி இருக்கேன்னு நினைப்போம் இல்லையா..? ஒரு மறந்துபோன கனவுன்னு சொல்வாங்க இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.. அதில் பேண்டசி கலந்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜே கோபிநாத்.

ஜீவி எடுக்கும்போது இரண்டாம் பாகம் எடுப்போமா என நினைக்கவே இல்லை.. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு லீட் வைத்துதான் முடித்துள்ளோம்.

முதல் பாகம் பார்க்கும்போதெல்லாம் ஏதோ குறையிற மாதிரி இருக்குதோ, இந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் அப்படி பண்ணியிருக்கலாமோ அப்படின்னு ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும். அதை இந்த இரண்டாம் பாகத்தில் ஜஸ்டிபை பண்ணியிருக்கேன். இந்த இடைவெளியில் இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு வந்த அனுபவமும் இந்த இரண்டாம் பாகத்தில் கைகொடுத்தது.

இயக்குநர் V.J.கோபிநாத் நிறைய தகவல்கள் கொடுத்து உதவினார் என்றால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாங்கள் கேட்ட அனைத்தையும் வழங்கினார்.

வெற்றியுடன் முதல் பாகத்திலிருந்தே நல்ல பழக்கம். முதல் பாகத்தில் கூட அவருக்கு நிறைய டவுட் இருந்துச்சு.. இப்படி பண்ணலாமா..? இது சரியா வருமான்னு கேட்டுட்டே இருப்பார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு தேர்ந்த நடிகராகவே மாறிவிட்டார். சிகரெட் பிடித்தால் கூட அதன் கண்டினியுட்டியை சரியாக பாலோ பண்ணுவார்.

இந்தப்படம் திரையரங்குகளுக்கு வராமல் ஒடிடியில் வெளியானதில் கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் தொடர்ந்து வரப்போகும் வாரங்களில் ரிலீஸுக்காக பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.. இந்த சமயத்தில் நம் படம் தியேட்டர்களில் வெளியாகும்போது அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காமல் போனால், தயாரிப்பாளருக்கும் கஷ்டம்.. மொத்த உழைப்பும் வெளியே தெரியாமலேயே கூட போய்விடும் சாத்தியம் இருந்தது.. அதனால் இந்த சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட்டது சரியான ஒன்று தான். ஓடிடி தளத்திலும் ரசிகர்களிடம் இருந்து குறைவில்லாத வரவேற்பு கிடைக்கவே செய்திருக்கிறது. மேலும் படம் துவங்கி ஆறு மாதத்திற்குள் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீஸும் ஆகிவிட்டதே மிகப்பெரிய சந்தோசம் தான்” என்கிறார் பிரவீண் குமார்..