ஜீவி 2 – விமர்சனம்!

இயக்குநர் V.J.கோபிநாத் இயக்கி,  கடந்த 2019-ம் ஆண்டில் வெற்றி, கருணாகரன், ரோகினி, மைம் கோபி  ஆகியோர் நடிப்பினில் வித்தியாசமான திரைக்கதையில் வெளிவந்து வெற்றி பெற்ற படம், ஜீவி. சஸ்பென்ஸுடன் முடிந்த க்ளைமாக்ஸின் நீட்சியாக ‘ஜீவி-2’  வெளிவந்துள்ளது.

ஜீவி 2 படத்தினில் வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். இந்தப்படத்தினை ‘மாநாடு’ வெற்றிப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன், வெற்றிகுமரன், நாகநாதன் சேதுபதி இணைந்து தயாரித்துள்ளார்.

முதலில் வெளியான ஜீவியைப் போலவே ஜீவி2 ம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா, பார்க்கலாம்.

வெற்றி அவர் குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் நகையை திருடியதால், வீட்டின் உரிமையாளர் ரோகினியின் மகள் அஸ்வினி சந்திரசேகர் திருமணம் நின்று போகிறது.. மேலும் வெற்றியின் வாழ்க்கையில் சில மர்மமான இழப்புகள் நேர்கிறது. இதை தவிர்ப்பதற்காக அவர் ரோகினியின் மகள் அஸ்வினி சந்திரசேகரை திருமணம் செய்து கொள்கிறார். செய்த பாவமா, கர்மாவின் விதி பலனா என்று தெரியாத நிலையில், ஜீவி 2 தொடர்கிறது.

ரோகினியின் மகள் அஸ்வினி சந்திரசேகரை திருமணம் செய்து கொண்ட வெற்றி, ஷேர் ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஒரு நாள் காணாமல் போன கருணாகரனை அவர் திரும்பவும் சந்திக்கிறார்.  அந்த சந்திப்பின் முடிவில் கருணாகரனுக்கு டீக்கடை வைத்து கொடுக்கிறார். அதோடு வெற்றியும் கார் வாங்கி ஓட்டி வருகிறார்.

சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் வெற்றியின் வாழ்க்கையில் மீண்டும் விதி தனது ஆட்டத்தை தொடங்குகிறது. வீட்டை வைத்து மனைவியின் கண் அறுவை சிகிச்சை செய்யலாம் என நினைத்திருந்த வெற்றிக்கு அந்த வீடு கடனில் இருப்பது தெரியவருகிறது. ஓட்டிக்கொண்டிருக்கும் கார் ரிப்பேராகிறது. அதை சரி செய்ய பணமில்லாமல் தவிக்கிறார். இப்படி பல சோதனைகள். மீண்டும் கருணாகரனுடன் சேர்ந்து திருட நினைக்கிறார் வெற்றி!

இதன் பின்னர் என்ன நடக்கிறது. என்பது தான்,  ‘ஜீவி-2’ படத்தின் சுவாரஷ்யம், திருப்பங்கள் நிறைந்த  கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வெற்றியின் ரியாக்‌ஷனுக்கேற்ற கதை, திரைக்கதை. திறம்பட செய்து இருக்கிறார். வெற்றியின் கூடவே வரும் கருணாகரன் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். இவர்களுடன் ரோகிணி, மைம் கோபி, அஸ்வினி சந்திரசேகர், ரமா, முபாஷிர், இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜவஹர் தவிர மற்றவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற படி நடித்துள்ளனர்.

பிரவீன்குமாரின் ஒளிப்பதிவும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும் படத்தின் பலம்.

விதியை மதியால் வெல்ல நினைக்கும் வெற்றியின் க்ளைமாக்ஸ் காட்சி சிறப்பு! அது ஜீவி 3 படத்திற்கான தொடர்ச்சி!

ஜீவி 2 சஸ்பென்ஸ் பிரியர்களுக்கான படம்..

ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தப் படம் நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.