‘ஜின் தி பெட்’ அனனைவரையும் கவரும்!  – முகேன் ராவ்.

‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி,  வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.

வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி,  இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.

தயாரிப்பாளர் கேயார் பேசுகையில்,

”ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும்.  தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின்’ என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.

இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி’ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்’. இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது.  எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,” என்றார்.

தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில்,

”ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் ‘ஜின்’ என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன். அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார். கதை விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம்.  அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து ‘ஜின் தி பெட்’ என டைட்டில் வைத்தோம். இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. ‘ஜின்- தி பெட்’ என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது. இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.. அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை,” என்றார்.

நடிகை பவ்யா தரிகா பேசுகையில்,

”2022 நவம்பர் 20ம் தேதியன்று நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய தோழிகள் ‘ஜின் ‘என்ற ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை. ஒரு வார்த்தையை சொல்லி அதனை அடிக்கடி சொல் அதனுடைய எனர்ஜி கிடைக்கும் என்றார்கள். அதனையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி இருந்து’ பவ்யா என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயம் ஏற்பட்டது.

அதன் பிறகு அடுத்த நாள் காலை என்னுடைய சமூக வலைதளத்தை பார்வையிடுகிறேன். அப்போது ஜின்ஷா என்றொரு ஃபாலோயர் நிறைய லைக்குகளை போட்டு கவனத்தைக் கவர்ந்தார். இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக கோவில், சர்ச், தர்கா, குருத்வாரா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தேன், மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது. அதன் டைட்டில் ‘ஜின்’. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது. இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார்.  அப்போது ஜின்னை பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதனால் தானோ என்னவோ இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன்.

இயக்குநர் பாலா மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் நட்பாக பழகக் கூடியவர். கலைஞர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல படத்தில் நடிக்கும் போதும் இயல்பாக இருந்தேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நல்லதொரு பாசிட்டிவான வைப் இருக்கிறது. ஜின் எனக்கு என் வாழ்க்கையில் ஆசியை வழங்கி இருக்கிறது. இந்தப் படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். மே 30ம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வாருங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் பேசுகையில்,

”நீண்ட நாள் கழித்து கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். இப்படத்தின் பாடல்களைப் பற்றியும், பின்னணி இசையை பற்றியும் குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி. படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாததாக இருந்தது. பணியாற்றிய பாடலாசிரியர்களுக்கும் நன்றி. திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து சந்தோஷமடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

‘ஜின் தி பெட்’ ஃபேமிலி என்டர்டெய்னர்.  படத்திற்கு பின்னணி இசையை அமைக்கும் போது உற்சாகத்துடன் பணியாற்றினோம். இந்தப் படத்தின் மூலம் டி ஆர் பாலா என்ற அருமையான நண்பர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார். அவருடைய முதல் படம் இது, கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி மா…’ என்ற பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. இந்தப் படத்தின் நாயகனான முகேன் மல்டி டேலன்டட் பெர்சன்.  நாங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.

இயக்குநர்-தயாரிப்பாளர் டி ஆர் பாலா பேசுகையில்,

”கடவுளுக்கு நன்றி. சின்ன வயதில் இருந்து எனக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்த்தவர் என் அம்மா தான். வீட்டிலிருந்து வெளியே சென்று நம்பிக்கையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அவர். அதற்கான அனைத்து விஷயங்களை கற்றுக் கொடுத்தவரும் என் அம்மா தான். இந்த படத்தை தயாரித்திருக்கும் ஃபேரிடேல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கும் என் அம்மா கொடுத்த ஊக்கம் தான் காரணம். இப்படி ஒரு மேடைக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன். இன்று கிடைத்திருக்கிறது. இந்த தருணத்தில் என் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான அனில் குமார் ரெட்டி மற்றும் ரகு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் தயாரிப்பிற்காக முதலீடு செய்த அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குழுவுடன் இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இணைந்த பிறகு படத்தின் தரம் உயர்ந்தது. அவர்களும் கடுமையாக உழைத்து ஹிட் பாடல்கள் வழங்கி இருக்கிறார்கள். இப்படத்திற்கு அருமையாக பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், கிராபிக்ஸ், ஸ்கிரிப்ட் டாக்டர், சண்டைப் பயிற்சி இயக்குநர், நடன இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராதாரவி, முகேன் ராவ், பவ்யா தரிகா, பால சரவணன், வினோதினி, ஜார்ஜ் விஜய், ரித்விக், இமான் அண்ணாச்சி என இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். நான் விஜய் சார் நடித்த மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்தில் அவர் ‘பொறுமையாக இருக்க கற்றுக்கொள்’ என அறிவுறுத்தி இருக்கிறார். அதனை நான் இன்று வரை உறுதியாக பின்பற்றி வருகிறேன். இந்தத் திரைப்படத்தை வாங்கி இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் விளம்பர படம் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றபோது அங்கு என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய வீட்டில் ஜின் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். அவர்கள் தான் இதனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். இது ஜின், வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு. தண்ணீர் கூடாது. சூரிய ஒளி கூடாது. இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகளை சொன்ன போது முதலில் ஆச்சரியமடைந்தேன். எனக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையைப் போல் பேய்கள் மீதும், அமானுஷ்யங்கள் மீதும் நம்பிக்கை உண்டு. ஜின்னை பற்றி அவர்கள் சொல்லும் போது அவர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தான் நான் முதலில் பார்த்தேன். இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளதாக சொன்னார்கள். இது தொடர்பாக பிறகு ஆய்வு செய்ய தொடங்கினேன். கூகுளில் ‘டோயோ’ என பதிவிட்டு தேடினால் இதைப்பற்றிய ஏராளமான விஷயங்கள் இடம் பிடித்திருப்பதை காணலாம். இதனை கருவாகக் கொண்டு நான் ஒரு கதையை உருவாக்கினேன்.

‘ஜின்னை’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும். இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி எண்டர்டெய்னர். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் முகேன் ராவ் பேசுகையில்,

”இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இயக்குநர் டி ஆர் பாலா உடன் ‘ஒற்றைத் தாமரை’ என்ற வீடியோ ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். என்ன தேவை என்பதில் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும். இந்த ‘ஜின்’ படத்திலும் அவருக்கு என்ன தேவையோ அதனை நடிகர்களிடமிருந்து பெற்றார். அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்காகவே அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருடன் தொடர்ந்து பயணிக்கவும் விரும்புகிறேன்.

இயக்குநரின் பெற்றோர்களான வேந்தன்-ராஜேஸ்வரி தம்பதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து கலைஞர்களையும் அக்கறையுடன் கவனித்தனர். தொடக்கத்தில் விவேக் மெர்வின் என்பது ஒருவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் அவர்கள் இருவர் என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இயக்குநர் டி ஆர் பாலாவிற்கும், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும் இடையேயான நட்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஏராளமான திரைப்படங்களை பார்த்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் சண்டை காட்சிகளின் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களின் பணிகள் நிறைவடைந்து இருப்பதால் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜின்-னும் ஒரு கதாபாத்திரம் தான். அவரும் இங்கு எங்கேயோ தான் இருப்பார். அவருக்கும் நான் நன்றியை சொல்கிறேன். இந்த ‘ஜின் தி பெட்’ படத்தின் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. அனைவரும் மே 30ம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.