கல்லூரியில் படித்து வரும் நாயகன் ரியோ ராஜ், அதே கல்லூரியில் படித்து வரும் நாயகி மாளவிகா மனோஜை கண்டவுடன் காதல் கொள்கிறார். இதனால், உடன் படிக்கும் சில மாணவர்களுடனான மோதல்களுக்கு பிறகு, இருவரும் ஒருவரை காதல் கொள்கின்றனர். அதோடு ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி வாழ்க்கை முடிவடைகிறது. சில வருடங்கள் சென்ற நிலையில் மாளவிகா மனோஜைத்தேடி, ரியோராஜ் கேரளா செல்கிறார். காதலி மாளவிகா மனோஜின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்குகின்றனர். இந்த மோதலின் போது ரியோ ராஜை தவறுதலாக புரிந்து கொள்ளும் மாளவிகா மனோஜ், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘ஜோ’ படத்தின் கதை.
இதுவரை வெளியான, கல்லூரி காதல் கதை தொடர்பான படங்களில் பார்த்த சம்பவம் தான் இந்தப்படத்திலும் இருக்கிறது. ஆனால் இந்த காதல் கதை, யாரும் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்டோடு, கை தட்டும் படியான ஒரு க்ளைமாக்ஸூடன் முடிகிறது.
இயக்குநர் ஹரிஹரன் ராம், பலரது கல்லூரி வாழ்க்கையினை ஏதோ ஒரு வித்ததில் நினைவு படுத்தி விடுகிறார். ஆரம்ப காட்சிகளில் கலகலப்பாக நகரும் திரைக்கதை, கொஞ்சம் கொஞ்சமாக சென்டிமென்ட் கலந்த காதல் கதையாக முற்று பெறுகிறது. யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ் படத்தின் பலம்.
கதாநாயகனாக நடித்துள்ள ரியோராஜ், வழக்கமான நடிப்பினை கொடுத்திருந்தாலும், இடைவேளைக்கு முன்னர், காதலியின் நிலையைக் கண்டு துடித்தபடி, விக்கித்து அழும் காட்சியில் சிறந்த நடிப்பினை கொடுத்துள்ளார். இந்த இடைவேளைக்காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே ஒட்டுமொத்தப்படத்தின் ஹைலைட்ஸ் காட்சிகளாக உயர்ந்து நிற்கின்றன. ரியோராஜ் குடித்த விஷத்தினை, நண்பனும் (அன்பு தாசன்)குடித்துவிட்டு தவிப்பது வெடிச்சிரிப்பினை ஏற்படுத்துகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது, கதாநாயகி நடிகை மாளவிகா மனோஜ் மட்டுமே. மலையாளம் பேசும் பெண் கதாபாத்திரத்தில், மிகச்சிறந்த நடிப்பினை கொடுத்திருக்கிறார். அவரது நேர்த்தியான நடிப்பு கதாபாத்திரத்தை உயர்த்திப்பிடித்திருக்கிறது. காதல், பாசம், கோபம், தாபம் என அனைத்து உணர்வினையும் அழகாக வெளிப்படுத்துகிறார். ரசிகர்களை எளிதில் வசப்படுத்தி விடுகிறார்.
திரைக்கதையில் மிகப்பெரிய டிவிஸ்ட் கொடுக்கும், இரண்டாம் பாதியில் வரும் நாயகி பாவ்யா நடிப்பு ஓகே!
ரியோ ராஜ் உடன் நடித்திருக்கும் நண்பர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கின்றனர்.
கல்லூரியின் வாட்ச்மேனாக வரும் சார்லி கலங்க வைத்துவிடுகிறார்.
இசையமைப்பாளர் சித்து குமார் இசை, ராகுல் ஒளிப்பதிவு ஓகே!
மொத்தத்தில், கலவையான விமர்சனங்களை பெற்ற, ஒரு ஆவரேஜ் ஃபீல் குட் லவ் ஸ்டோரி!