‘ஜாலியோ ஜிம்கானா’ – விமர்சனம்!

டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் எழுதி இயக்கியிருக்கும் படம், ‘ஜாலியோ ஜிம்கானா’.

‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, அபிராமி,  யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.மகேந்திரன், மடானோ செபாஸ்டியன், அபிராமி பார்கவன், மரியா, யோகி பாபு, மதுசூதன் ராவ், ஜான் விஜய், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, சிவா, புஜிதா பொன்னடா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹோட்டல் நடத்தி வரும் ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்தினர், அரசியல்வாதியான மதுசூதனின் கட்சி நிகழ்ச்சிக்காக சாப்பாடு செய்து கொடுக்கின்றனர். அதற்கான பணத்தை தராமல், மதுசூதனும் அவரது ஆட்களும் ஒய் ஜி மகேந்திரனையும் அவரது குடும்பதினர்களான மடோனா செபாஸ்டியன், அவரது அம்மா அபிராமி, சகோதரிகளையும் அடித்து துரத்தி விடுகின்றனர். மற்றொரு புறம், இவர்களுக்கு கடன் கொடுத்த சுரேஷ் சக்ரவர்த்தி மிரட்டுகிறார்.

இந்த பிரச்சனைகளை தீர்க்க, பொதுநல பிரச்சனைகளில் தானே முன்வந்து வாதாடும் வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க செல்கின்றனர். அங்கே பிரபு தேவா பிணமாக கிடக்கிறார்.பிரபு தேவாவை கடைசியாக சந்தித்தவர்கள் இவர்கள் தான் என்பதால் கொலைப்பழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். ஒரு புறம் கடன் கொடுத்த சுரேஷ் சக்ரவர்த்தி, இன்னொரு புறம் கொலைப்பழி இதிலிருந்து மடோனா செபாஸ்டியன் குடும்பம் தப்பித்ததா, இல்லையா? என்பது தான் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் கதை.

தனித்துவமான நடனத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பிரபு தேவா, படம் முழுவதும் பிணமாக நடித்திருக்கிறார். படத்திற்கான இவரது நடிப்பும் பிணமாகவே இருக்கிறது. பாடல் காட்சிகளிலும் ஏமாற்றியிருக்கிறார். க்ளைமாக்ஸில் இடம்பெறும் சண்டைக்காட்சி கர்ண கொடூரம்!

மடோனா செபாஸ்டியன், அபிராமி அண்ட் கோ கலகலப்பாகவும், கிளு கிளுப்பாகவும் இருக்கிறார்கள்.

மூல வியாதிக்காராக நடித்திருக்கும் யோகி பாபுவின் காட்சிகள் கொடுமை. ரெடிங் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், உள்ளிட்டவர்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க படாத பாடுவதோடு, படம் பார்ப்பவர்களையும் கதற வைக்கிறார்கள்.

அரதப்பழசான கதையை எழுதி, இயக்கியிருக்கும் சக்தி சிதம்பரத்தின் திரைக்கதை பல இடங்களில் தடுமாறி நிற்கிறது. படம் ஆரம்பமாகும்போதே லாஜிக் பாக்காதீங்கன்னு இயக்குநர் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு

‘ஜாலியோ ஜிம்கானா’ படுத்தி எடுக்குது!