‘வாமா என்டர்டெயின்மென்ட்’ சார்பில், ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜோரா கைய தட்டுங்க படம் வரும் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் கலந்து கொண்ட நடிகர் யோகிபாபு பேசியதாவது…,
தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி! என்றார்.