‘காக்கி சர்க்கஸ்’  –  விமர்சனம்!

முனீஷ்காந்த் , சுபாஷ் செல்வம் , ராஜேஷ் மாதவன், கௌதமி நாயர், வின்சு ரேச்சல் ஷாம், சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடிப்பினில்,  zee 5 தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வரும் இணையத்தொடர்‘காக்கி சர்க்கஸ்’. அமீன் பாரிஃப் இயக்கத்தில், ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ சார்பில், ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்திருக்க, விபின் பாஸ்கர் மற்றும் சேவியர் இசையமைத்துள்ளனர்.

ஜெயில் வார்டன் முனீஷ்காந்தின் கண்காணிப்பிலிருக்கும் போது, கைதி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான முனீஷ்காந்த் கைதிகளிடம் பரிவுடன் நடந்து வருகிறார். இவரது போக்கு சிறைக்காவலர் சுபாஷ் செல்வத்திற்கு பிடிக்கவில்லை. கைதிகளிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டால் தான், குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடாமல் இருப்பார்கள் என்பது இவரது எண்ணம். சிறை வளாகத்திற்குள் ஒரு கண்ணகி கோவில் இருக்கிறது. அதை அங்கிருக்கும் காவலர்களும், கைதிகளும் வழிபட்டு வருகின்றனர்.

பஸ் கண்டக்டரான ராஜேஷ் மாதவன், திருடும் பழக்கம் கொண்ட (Kleptomania) கௌதமி நாயருக்கும் காதல் உருவாகிறது. இந்த பழக்கத்தின் மூலமாக ராஜேஷ் மாதவனும் திருட பழகுகிறார். நாளடைவில் திருடுவதில் மிகுந்த த்ரில் அனுபவத்தை உணருவதால், அவர் ஜெயிலுக்குள் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியலை திருடுகிறார். இது மக்களிடையே பேசு பொருளாகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘காக்கி சர்க்கஸ்’ இணையத் தொடரின் சுவாரசியமற்ற திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

சிறை கண்காணிப்பாளர் கதாபாத்திரத்தில், முனீஷ்காந்த் தனது வழக்கமான நகைச்சுவை நடிப்பினை கொடுத்திருக்கிறார், காவலராக நடித்திருக்கும் சுபாஷ் செல்வம் கவனிக்கும்படியான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். பஸ்கண்டக்டராகவும், திருடனாகவும் நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன், அவரது காதலியாக நடித்திருக்கும் கௌதமி நாயர் இருவரும் பொருத்தமான நடிப்பினை கொடுத்துள்ளனர். வின்சு ரேச்சல் ஷாம்க்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் குறிப்பிடும்படி நடித்துள்ளார்.

நடிகர், நடிகைகளின் நடிப்பு பாராட்டும்படி இருந்தாலும், சுவாரசியமற்ற திரைக்கதை ரசிகர்களுக்கு அயற்சியை ஏற்படுத்துகிறது. முதல் எபிசோடிலிருந்து, கடசி வரை சுவாரசியமே இல்லை. அதிலும் முதல் 2 எபிசோட் மிகவும் மோசம். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சுமாரான நகைச்சுவை உணர்வினை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்ப ரீதியாக நீரஜ் ரெவி ஒளிப்பதிவும், விபின் பாஸ்கர் மற்றும் சேவியர் ஆகியோரது இசையும் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.