காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்!

‘ஸ்ரீ ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘அறம் எண்டர்டெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்திருக்கும் படம், ‘காலங்களில் அவள் வசந்தம்’.  அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கௌஷிக் ராம்,  கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர், ஹீரோஷினி நடித்துள்ளனர். இவர்களுடன், மேத்யூ வர்கீஸ்,  ஜெயா சுவாமிநாதன், அனிதா சம்பத், லொள்ளுசபா சாமிநாதன், RJ விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌஷிக் ராம், சூது வாது தெரியாத ஒரு தத்தி. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் சினிமா ஹீரோவாக நினைத்து வாழ்ந்து வருபவர். பார்க்கும் பெண்களிடமெல்லாம் தனது காதலை சினிமாத்தனமாக வெளிப்படுத்துபவர். இப்படி ஒருநாள் மழை பொழியும் வேளையில் அவர், ஹீரோஷினியிடம் காதலை தெரிவிக்கிறார். அவரும் சம்மதிக்கிறார்.

இந்நிலையில் அஞ்சலி நாயர் கௌஷிக் ராமை கண்டவுடன் காதல் கொள்கிறார். அவர் விருப்பப்படியே கல்யாணமும் நடக்கிறது. சில நாட்களில் இவர்களக்குள்  ஏற்படும் கருத்து வேறுபாடு சிறிய விரிசலை ஏற்படுத்துகிறது. அச்சமயத்தில் கௌஷிக் ராமை தேடி அவரது காதலி ஹீரோஷினி வருகிறார். இதனால் இவர்களுக்குள்ளான விரிசல் மேலும் விரிவடைகிறது. இதற்கு பிறகு நடக்கும் ரொமேன்ஸ் கலாட்டாக்களே ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் ஜாலியான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

இயக்குனர் ராகவ் மிர்தாத், கதைக்கேற்றபடி நடிகர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதனால் அந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றன.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் கௌஷிக் ராம், கைதேர்ந்த நடிகரைப் போல் நடித்துள்ளார். ஃபைட், டான்ஸ், ரொமேன்ஸ், அப்பாவி என சூழ்நிலைகளுக்கு தகுந்த முகபாவனைகளை எளிதாக காட்டிவிடுகிறார். சில இடங்களில் ‘7 ஜி ரெயிபோ காலனி’ படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணாவை நினைவூட்டுகிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்தால் சிறந்த நடிகராக நிலைத்திருப்பார். வாழ்த்துக்கள் கௌஷிக் ராம்.

நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், காட்சிக்கு, காட்சிக்கு  தூள் கிளப்புகிறார். கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். தனது அழகாலும், நடிப்பாலும் எளிதில் ரசிகர்களை வசீகரித்து விடுகிறார்.

அதேபோல் கௌஷிக் ராமின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயா சுவாமிநாதன் மனதை விட்டு அகலாத நடிப்பினை கொடுத்துள்ளார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஹீரோஷினிக்கு காட்சிகள் குறைவு. இருந்தாலும் நடித்த சில காட்சிகளில் ‘ வெகுளித்தனமான’ கதாபாத்திரத்தில் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளார்.

இப்படி படத்தில் நடித்துள்ள ‘ லொள்ளு சபா’ சுவாமிநாதன், விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர்- ன் இசையும் படத்தின் முக்கியமான அம்சங்களாகவே இருக்கிறது. காட்சிகளை கண்ணுக்கு அழகாக படம்பிடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன். குறிப்பாக பின்னணி இசை பிரம்மாதம். எல்லாப் பாடல்களிலும் இளமை ததும்பி வழிகிறது.

காதல்னா என்ன? என்பதை, இயக்குநர்  ராகவ் மிர்தாத் அவருடைய அனுபவத்திலிருந்து இளமையும், அழகும் ஒருசேர சொல்லியிருக்கிறார். இனிமையாக இருக்கிறது.

காதலர்களும், இளஞ்சோடிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!