‘மொழி’ படத்திற்கு பிறகு ராதாமோகனும், ஜோதிகாவும் இணைந்துள்ள படம் ‘காற்றின் மொழி’. ‘போப்டா மீடியா ஒர்க்ஸ்’ இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர்
எப்படி இருக்கிறது ராதாமோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி?
கணவர் விதார்த், மகன் தேஜஸ் உள்ளிட்ட மகிழ்ச்சியான குடும்பத்தின் தலைவி ஜோதிகா. சுறுசுறுப்பான பெண்.எப்போதும் சிரித்த முகத்துடன், சந்தோஷமாக இருப்பவர். எல்லோரையும் போல் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம்.
அதற்கு பெரும் தடையாக இருப்பது ஜோதிகாவின் கல்வித்தகுதி. பிளஸ் 2 அளவிலேயே தோல்வியுற்றவர். இருந்தாலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு காரணமாக எப்போதும் தேடலிலேயே இருக்கிறார்.
ஜோதிகாவின் கனவு நிறைவேறும் வகையில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வானொலியில் ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைக்கிறது. ரேடியோ ஜாக்கியாகும் அவர் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
அந்தரங்கங்களை அலசும் ஹெல்லோ… எனும் ஜோதிகாவின் செக்ஸி குரல் பலருக்கு தீர்வாகவும் எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களுக்கு அது ஒரு தெய்வீகக் குரலாகவும் ஒலிக்கிறது.
நேயர்களின் அமோக ஆதராவால் சில நாட்களிலேயே அந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெறுகிறது. வானொலி நிலையத்திலிருக்கும் அனைவரும் அந்த வெற்றியைக்கொண்டாடுகின்றனர்.
அதற்கு நேர்மாறாக ஜோதிகாவின் மொத்த குடும்பமும் சந்தோஷத்தை தொலைக்கிறது. குடும்பத்தில் தொலைந்துபோன அவர்களின் சந்தோஷம் கிடைத்ததா? என்பதே ‘காற்றின் மொழி’.
இரவுநேர வேலைக்குச்செல்லும் பெண்களை கௌரவ படுத்தியிருக்கிறது ஜோதிகாவின் கதாபாத்திரம். இந்தப்படத்திற்கு பிறகு (ஜோதிகா )திருமதி விஜயலகட்சுமி பாலகிருஷ்ணனைப் போல் பல பெண்களின் கட்டுகள் அவிழ்க்கப்படும்!
ஜோதிகாவின் தேர்ந்த நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம்.பல காட்சிகளில் மனதை கவருகிறார்.
எதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார் விதார்த். ரேடியோ ஸ்டேஷன் ஹெட்’ ஆக வரும் லக்ஷ்மி மஞ்சு சரியான தேர்வு. சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், சிந்து ஷியாம், தேஜஸ், சாண்ட்ரா மற்றும் கெஸ்ட் ரோலில் வரும் சிம்பு என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஹெல்லோ…. என அழைக்கும் ஜோதிகாவின் குரலால் கிறங்கிப் போகும் மயில்சாமி வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார். இவரைத்தவிர வேறு யாராலும் அந்தக்காட்சியில் அப்படி நடித்திருக்க முடியாது.
திரைக்கதையில் நாடகத்தன்மை இருந்தாலும் ரசிக்கவைக்கிறது ‘காற்றின் மொழி’