‘ஜே ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ள திரைப்படம் ‘காயல்’. இதில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ‘ரேடியோ சிட்டி’ பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள நடிகையான அனுமோள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கலப்பு சாதி திருமணத்தை எதிர்ப்பதில் ஆண்கள் மட்டுமே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். பெண்களும் எதிர்ப்பார்கள் என்றும் அவர்கள் எமோஷனலாக எப்படி செயல்படுவார்கள் என்பதையும் சொல்லும் விதமாக ‘காயல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைக்கதை முன்னும் பின்னும் நகர்வதால் லேசான குழப்பம் நிலவுகிறது. அதை தவிர்த்திருக்கலாம். ஒளிப்பதிவும், இசையும் படத்தின் பிரதானமாக விளங்குவதோடு ரசிக்கவும் வைக்கிறது. ஜஸ்டினின் இசையமைப்பில் பாடல்கள், எங்கேயோ கேட்ட மாதிரியாக இருந்தாலும் கேட்பதற்கு சுகமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
தேன் மொழியாக நடித்திருக்கும் காயத்ரி, அளவான நடிப்பின் மூலம் மனம் நிறைகிறார். அவரின் அம்மாவாக நடித்த ஐசக் வர்கீஸூம், அம்மாவாக அனுமோலும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர்.உணர்வுகளை கொட்டி நடிக்க வேண்டிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் லிங்கேஷ் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம். மன நல மருத்துவராக நடித்திருக்கும் ரமேஷ் திலக், அவரது நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்.
லிங்கேஷை விரும்பும் பெண்ணாக நடித்திருக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், துறு துறு நடிப்பின் மூலம் இளைஞர்களை எளிதாக கவர்ந்து விடுகிறார். அறிமுக இயக்குநர் தமயந்தி, காதலில் சாதிய குறுக்கீடு பற்றி ஒரு டீசன்ட்டான படத்தினை கொடுத்திருக்கிறார். ஆனால், அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.