மிகச் சிறிய பட்ஜெட் படங்களும், போதிய பட்ஜெட் இல்லாமல் வெளியாகும் சில படங்களும், அவ்வபோது கவனம் ஈர்க்கும். அப்படித்தான் இந்த வாரம் வெளியாகியுள்ள ‘காதம்பரி’ படமும்.
குறைந்த நடிகர்கள் அதாவது வெறும் 8 பேர் மட்டுமே நடித்துள்ளனர். 2 ஆண்கள் 3 பெண்கள் உள்ளிட்ட நண்பர்கள் குழு காட்டுக்குள் ஜாலி ட்ரிப் செல்கிறது. காட்டின் நடு வழியில் சிறு விபத்தில் சிக்குகின்றனர்.
கொட்டும் மழையில் அவர்கள் சென்ற வண்டியும் பழுதாகிவிடுகிறது, இதனால் அருகில் உள்ள ஒரு ஊமை பெரியவரின் பங்களாவில் அன்றைய இரவை கழிக்கலாம் என முடிவு செய்கின்றனர்.
அந்த பங்களாவின் உள்ளே சில அமானுஷ்ய விஷயங்கள் இவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. சிலர் கொல்லப்பட, எஞ்சியுள்ளவர்களின் நிலை என்ன ஆகிறது. காதம்பரி யார்? என்பது தான் படத்தின் முழுக்கதை.
பேய்ப்படங்களின் அச்சுபிசகாத டெம்பிளேட். ஆனால் புதிதான பேய் கதை, திரைக்கதை.
ஆனால் சரியாக வடிவமைக்கப்படாத காட்சிகளால் சுவாரஷ்யம் மிஸ்ஸாகிறது. டெக்னிக்கலாகவும் தோற்றுள்ளனர்.
ஆபாச காட்சிகளுக்கு அநேக வாய்ப்புகள் இருந்தும் தவிர்த்துள்ளனர். படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிற அருள் இன்னும் முயற்சித்திருந்தால் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கலாம்.
அருளின் காதலியாக வருகிற காஷிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி என படத்தில் அத்தனைப் பேரும் புதுமுகங்கள். இருந்தாலும் நன்றாக நடித்துள்ளனர்.