‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!

காதல் ரீசெட் ரிப்பீட், இத்திரைப்படத்தின் கதையை ஏ. மகாதேவ் உடன் எழுதி, இயக்கியிருக்கிறார், இயக்குநர் விஜய். இதில்மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார், அரவிந்த் கிருஷ்ணா.

அர்ஜூன் அசோகன் நடத்தி வரும் இசைக்குழுவில் பாடகியாக இருப்பவர் ஜியா சங்கர். இவரது குரலுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது. காதலர்களான இவர்களது ஒரே லட்சியம் ஸ்காட்லாந்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதும், அங்கேயே செட்டிலாகவும் விரும்புகின்றனர். அப்படியே அங்கே செல்கின்றனர். அப்போது அர்ஜூன் அசோகனுக்கும் இசைக்குழுவில் இருக்கும் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜியா சங்கர், தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். சிறுவயதிலிருந்தே பின் தொடரும் மதும்கேஷ், அவரைக்காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். ஜியா சங்கர் தலையில் ஏற்பட்ட காயத்தின் மூலம், ஒரு நாளில் நடப்பவற்றை அடுத்த நாளில் மறந்துவிடும் அளவிற்கு அவரது மூளை பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதும்கேஷ் ஒவ்வொரு நாளும் காதலனாக நடித்து அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், அர்ஜூன் அசோகனின் குழுவிலிருந்த ஜியா சங்கர் இடம் பெற்றால் தான், தனது குழு அங்கீகாரம் பெறும் சூழ்நிலையில் ஜியா சங்கரை சந்திக்கிறார், அவர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.

இது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம். நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கருக்கு நடிப்பதற்கான காட்சிகள் ஏராளம். அதை அவர் நன்கு பயன்படுத்தியுள்ளார். அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார்.

நாயகர்களாக நடித்திருக்கும் மதும்கேஷ், அர்ஜூன் அசோகன் இருவரில், மதும்கேஷ் அதிஅக வசங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார், அர்ஜூன் அசோகனுக்கு அதிக வசனங்கள். மிகையான நடிப்பு. ஜியா சங்கரை கடத்தும் காட்சிகள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.

விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலமாக இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சில இடங்களில் மனம் நிறைகிறார்.

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட அநேக காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தின் பலம். ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

முக்கோண காதல் கதையை, புதிய வடிவில் கொடுத்திருக்கும் இயக்குநர் விஜய், நம்பகமில்லாத காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். க்ளைமாக்ஸ், படத்தின் தலைப்பிற்கு வெகு பொருத்தம்!

‘காதல் ரீசெட் ரிப்பீட்’  – பார்க்கலாம்!