Kaithi Movie Review

Kaithi Movie Review

தொடர்ந்து வித்தியாசமான படங்களை தயாரித்து வரும், ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ மற்றும்  ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம் ‘கைதி’.

இந்தப்படத்தில்  கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியம், ரமணா, தீனா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன்  ஆகியோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசைப்பதிவில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  பிலோமின் ராஜ் எடிட் செய்ய, இரட்டையர்கள் அன்பறிவ்  சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

‘கைதி’. படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், பொன். பார்த்திபனுடன் இணைந்து வசனமும் எழுதியுள்ளார்.

சுமார் 180 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட ‘பிகில்’ படத்துடன் ‘கைதி’ வெளியானதால் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்களா பார்ப்போம்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  ( Narcotics Control Bureau ) அதிகாரி நரேன் தலைமையிலான டீம் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளை சீஸ் பண்ணி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கின்றனர்.

அதனால் கடும்கோபத்திற்கு ஆளாகும் ட்ரக்ஸ் மாஃபியா  நரேன் டீமை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட திட்டமிடுகிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக ஆயுள் தண்டனை காலம் அனுபவித்து விட்டு மகளை பார்க்க வெளியே வரும் கார்த்தி சிக்கிக்கொள்கிறார்.

இதன் பிறகு அந்த ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் ‘கைதி’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்தவுடன் விறுவிறுப்பும், ட்விஸ்ட்களும் திரைக்கதையுடன் இணைந்து நகர்கிறது. 20 நிமிடங்களுக்கு பிறகு அறிமுகமாகும் கார்த்தியின் அறிமுக காட்சி மிரட்டல். அவர் லாரியை எடுக்கும் ஸ்டைல், ஓட்டிய பிறகு அந்த லாரியின் கன்டீஷனை பட்டியலிட்டு பேசும் போதும் அவருடைய அறிமுக காட்சி ஆரவாரமான எதார்த்தம்.

வில்லன்கள் சூழ்ந்துகொள்ள கமிஷனர் அலுவலகத்தில் சிக்கிக்கொள்ளும் போலீஸ் கான்ஸ்டபிள் ஜார்ஜ் மரியம் நடிப்பு அனைவரையும் கவருகிறது. அது போலவே ஹரிஷ் பெராடி, ‘KPY’ தீனா ஆகியோரது பங்களிப்பும் படத்தை போரடிக்கவிடாமல் நகர்த்துகிறது.

கார்த்தியின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். பிறந்தது முதல்  மகளின் முகத்தை பார்த்தேயிராத ஒரு தந்தையின் குற்ற உனர்ச்சியையும், ஏக்கத்தையும் ஒருசேர முகத்தில் காட்டி படம் பார்ப்பவர்களின் கண்களை கசிய வைக்கிறார். அதேபோல் நரேனின் மகளுக்கு உடைந்து, நசுங்கிப்போன தோட்டினை பரிசளிக்கும் காட்சியிலும்.

நரேனுக்கு நிச்சயம் இது நல்ல படம். ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் அதிவீரிய போதை மருந்து கலக்கப்பட்ட மதுபானத்தை குடித்த நிலையில் அந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடாமல் மறைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் மூலம் ஒரு நேர்மையான அதிகாரியாக மிளிர்கிறார்.

முதல் பாதி ஏற்படுத்திய  பிரமிப்பு இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.

குறிப்பாக குவாரியில் நடக்கும் சண்டைகாட்சிகளை சொல்லலாம். அதிலும் கமிஷனர் ஆஃபிசில் நடக்கும் சண்டைக்காட்சியில் ‘ராம்போ மெஷின் கன்’ னை எடுத்து கார்த்தி சுடும் காட்சியை சொல்லலாம்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ‘கைதி’ படத்தின் முக்கியமான அம்சம். காட்சிகளுக்கேற்ற சாம் சி.எஸ்-ன் சரியான  பின்னணி இசை படத்திற்கான கூடுதல் பலம்.

ஹரிஷ் உத்தமன்  ‘கைதி’ கார்த்தியை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு சொல்லாமல் ஒரு சஸ்பென்சில் விட்டதும் ஒரு கிக்! ஏற்படுகிறது.

வழக்கமான காதலன் காதலி டூயட் காட்சிகள், பாடல்கள், பஞ்ச் வசனங்களை தவிர்த்து ஒரு சூப்பர் கமர்ஷியல் படம் எடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

‘கைதி’யை தாராளமாக பார்க்கலாம்.