‘கலன்’ – விமர்சனம்!

கணவனை இழந்த வெட்டுடையார் காளி (தீபா), தனது ஒரே மகன் வேங்கையுடன் (யாசர்) வசித்து வருகிறார். இவர்களுக்கு துணையாக அவரது தம்பி அப்புக்குட்டி இருக்கிறார். வேங்கையின் நண்பன் கஞ்சா வியாபாரிகளிடம்  (சம்பத் ராம் மற்றும்  காயத்ரி) வேலை செய்து வருகிறான். இந்நிலையில் வேங்கையின் நண்பன் தனியாக கஞ்சா விற்க ஆரம்பிக்கிறான். இதனால் ஏற்படும் மோதலில், வேங்கை உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், சம்பத் ராம் மற்றும்  காயத்ரி கோஷ்டியினர் அவரை கொலை செய்துவிடுகிறது. அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையின் மரணத்திற்கு பழி தீர்க்க களமிறங்குகிறார்கள் தீபாவும் அவரது கோஷ்டியினரும். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை அதிரடியாகவும், சமூகத்திற்கு அவசியமானதாகவும் சொல்வதே ‘கலன்’ படத்தின் கதை.

காளி என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக நடித்திருக்கும் தீபா, தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேஷனில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் போதை கும்பலுக்கு அவர் விடுக்கும் எச்சரிக்கை வசனங்கள் தெறிக்கின்றன.

தீபாவின் தம்பியாக நடித்திருக்கும் அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்கிறார். அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கஞ்சா வியாபாரியாக, வில்லனாக நடித்திருக்கும் சம்பத் ராமின் வில்லத்தனம், சூப்பர்.

காயத்ரி, சம்பத் ராமின் அக்காவாக, மிரட்டும் விழிகளுடன், கையில் சுருட்டு சகிதமாக அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அவரது நடிப்பு தனித்து நிற்கிறது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் நடிப்பினை வரிசை படுத்தினால், இவருக்கு முதலிடம். ஸ்டார் இயக்குநர்கள் இவரை இன்னும் பயன்படுத்தாமல் இருக்கின்றனர்.

வேங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், தென் மாவட்ட இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன் ராஜ்,  வழக்கமான நடிப்பினை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசை, ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு படத்தின் பலம்.

எழுதி இயக்கியிருக்கும் வீரமுருகன், காட்சிகளை இன்னும் பரபரப்பாக அமைத்திருக்கலாம். சில இடங்களில் சாதிய குறியீடுகள்  அப்பட்டமாக இருக்கிறது. ஒரு சார்பான மதம் குறித்த சர்ச்சை காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். பல இடங்களில் லாஜிக் மீறல்கள். குறிப்பாக இன்ஸ்பெக்டர் சேரன் ராஜ் கதாபாத்திர வடிவமைப்பு.

இயக்குநர் வீரமுருகன், சமூகத்தில் போதை பொருள்களின் ஆதிக்கம் அது சார்ந்த பிரச்சனைகளை சொல்ல வந்ததற்காக பாரட்டலாம்.