களவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது போல் சித்தரித்து இருந்தார். படத்தின் காப்பிரைட் உரிமையை பெற்றிருந்த மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன், படத்தின் தமிழக விநியோக உரிமையை தனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தார்.
படத்தின் தமிழக விநியோக உரிமை தங்களிடம் தரப்படாமல் இருந்ததால் தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி 6 வார இடைக்கால தடை பெற்றிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சிங்காரவேலன், விமல், சற்குணம், ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக மூன்றாம் எதிர்மனுதாரர் இயக்குநர் சற்குணம் நீதிமன்றத்தை அணுகி விமல் செய்து கொடுத்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அதனால் தடையில் இருந்து தனக்கு மட்டும் விலக்கு அளிக்க மனு அளித்தார்.
அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இயக்குநர் சற்குணம் மட்டும் படத்தை வெளியிட தடையில்லை எனவும், மற்றவர்கள் வெளியிட தடை நீடிப்பதாகவும், கூடுதல் ஆவணங்களுடன் மனுதாரர் மனுதாக்கல் செய்து வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்ய உள்ளது. வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட்டால், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும், கஸ்தூரி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
படத்திற்கு பகுதி தடை மட்டுமே நீங்கி இருப்பதால் பட வெளியீட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.