பிரபாஸின் கல்கி 2898 கிபி படத்தின் டிரெய்லர் வெளியானது!

இந்தியா முழுதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘கல்கி 2898 கிபி’ படத்தின், அதிரடியான டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் படத்தின் புதுமையான உலகை நமக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் இந்திய புராணத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள, சயின்ஸ் பிக்சன் உலகம் பற்றிய முழு அறிமுகத்துடன், பல ஆச்சர்யங்களையும் வழங்குகிறது.

இந்த டிரெய்லர் முன்னணி நட்சத்திரங்களின் அவதாரங்களை அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.  மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் ‘அஸ்வத்தாமா’வாக துணிச்சலான ஸ்டண்ட்களை நிகழ்த்துகிறார், உலகநாயகன் கமல்ஹாசன் அடையாளம் காண முடியாத, அவதாரத்தில் ‘யாஸ்கின்’ ஆக தோன்றுகிறார், மேலும் பிரபாஸ் புஜ்ஜிக்கு கட்டளையிடும் பைரவாவாக  திரையில் மிரட்டுகிறார். தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ‘சுமதி’யாக நடிப்பால் மனதை கொள்ளை கொள்கிறார். மேலும் திஷா பதானி ‘ராக்ஸி’யாக திரையில் மின்னுகிறார்.

கல்கி 2898 கி.பி.யின் டிரெய்லர் மூன்று தனித்துவமான உலகங்களை அறிமுகப்படுத்துகிறது: காசி, உயிர் வாழ  போராடும் கடைசி மீதமுள்ள நகரமாக சித்தரிக்கப்படுகிறது. உயர்தட்டு மனிதர்களால்  உருவாக்கப்பட்ட வானத்தில் மிதக்கும் நகரமாக  சொர்க்கம் ஒன்றும் ; ஷம்பாலா, எனும் பெயரில் அகதிகள் அடைக்கலமாக விளங்கும் ஒரு மாய நிலம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசை, மிகச்சிறந்த VFX மற்றும் நம்ப முடியாத மாயாஜால காட்சிகள் ஆகியவற்றுடன், இந்திய சினிமாவின் மிக உயர்ந்த முயற்சிகளில் ஒன்றாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் டிரெய்லர் கிடைக்கிறது.

‘கல்கி 2898 கி.பி’யில் இயக்குநர் நாக் அஷ்வினின் தொலைநோக்கு பார்வை, இந்திய சினிமாவை  அற்புதமான அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. டிரெய்லரில் வரும்  மஹாபாரதத்தைப் பற்றிய குறிப்பு ஒரு தனித்துவமான தருணமாக அமைந்துள்ளது.

‘கல்கி 2898 கி.பி’ ஒரு உண்மையான பான்-இந்தியத் திரைப்படமாகும், இது நாடு முழுவதிலுமுள்ள மிகச்சிறந்த திறமையாளர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த சயின்ஸ்பிக்சன்  திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.