‘கள்வன்’ – விமர்சனம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம்,  கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமம், இருட்டிபாளையம். வனப்பகுதிக்கு மிக அருகாமையில் இருக்கும், இந்த கிராமத்தில் வசிக்கும், (நிஜமாகவே யானைகள் வந்து போகும் இடம்.)

கெம்பன் என்ற கெம்பராஜன்(ஜி.வி.பிரகாஷ் குமார்), சூரி (விஜய் டிவி தீனா) இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆதரவற்ற இவர்கள், கண்ணில் பட்டதையெல்லாம் திருடுபவர்கள். கக்கூஸ் பக்கெட்டை கூட விட்டு வைக்காதவர்கள். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள், அவ்வப்போது யானைகளால் பலியாகி வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் டிவி தீனா, ஒழுக்கக்கேடான இந்த இருவரும், திருடியதில் வரும் பணத்தில், ‘தமிழ்நாடு அரசு’ நடத்தி வரும், டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர். ஒரு நாள், நர்ஸிங் படிக்கும் மாணவி, இவானாவை சந்திக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். கண்டவுடன் காதல் கொள்ளும் அவர், இவானாவிடம் காதலைச் சொல்ல, அதற்கு இவானா மறுக்கிறார்.  அதன்பிறகு, ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியவர் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார். இதன் பிறகு என்ன நடந்தது? காதல் கை கூடியதா? முதியவரை தத்தெடுத்தது ஏன்? என்பதே,  ‘கள்வன்’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஜி.வி.பிரகாஷ், இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. ஈரோடு வட்டார பாஷையினை நன்றாகவே பேசி, நடித்திருக்கிறார். ஆனால் கெம்பன் என்ற கதாபாத்திரத்திற்கான தோற்றம் சரியாக இல்லை. ஜி.வி.பிரகாஷின் அநேக படங்களில் வருவது போல் இந்தப் படத்திலும் அவருக்கான காட்சிகள் இருந்தாலும், இவானா காதலை நிராகரிக்கும்போது அவர் போடும் திட்டம், அந்த கதாபாத்திரத்தின் குரூரத்தினை வெளிப்படுத்துகிறது. இந்தக்காட்சியிலும், க்ளைமாக்ஸில், கூனி குறுகியபடி, பாரதிராஜாவின் கால்களில் விழுந்து அழும் காட்சியிலும் ஜி.வி.பிரகாஷ் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

பாலாமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவானா, தனது வசீகரமான முகத்தோற்றத்தின் மூலமும், சிறப்பான நடிப்பின் மூலமும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். க்ளைமாக்ஸில், பாரதிராஜாவைத் தேடி பதறியபடி ஓடும் காட்சியிலும், ஜி.வி.பிரகாஷின் முகத்தில் ‘பளார்’ விடுவதும், அவர் நடிப்பினில் சிறப்பான காட்சிகள்.

வயதின் முதிர்ச்சி, ஏக்கம் நிறைந்த மனநிலையோடு பரிதவித்து நிற்கும் பாரதிராஜா, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். திடீரென மாவுத்தனாக மாறி, யானையை அடிபணியச் செய்யும் காட்சி ஈர்ப்பு!

ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தீனா, தனது வழக்கமான பாணியின் மூலம், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஜி.வி.பிரகாஷின் திட்டம் அறிந்து, ஜெர்க்காகும் காட்சியில், குணச்சித்திர நடிகராக மிளிர்கிறார்.

இவர்களைத் தவிர, ஊர் தலைவர், வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள், ஊர் மக்கள் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் இனிமை. ரேவாவின் பின்னணி இசை படத்தின் பலம்!

படத்தினை இயக்கியிருக்கும் பி.வி.சங்கர், அவரது ஒளிப்பதிவில், பசுமை நிறைந்த வனப்பகுதிகளை, பசுமை மாறாமல் படமாக்கியிருப்பதோடு, க்ளைமாக்ஸில் யானை துரத்தும் காட்சிகள், குல தெய்வக் கோயிலில் பாரதிராஜாவை நெருங்கும் யானைக் காட்சி, போன்றவை, சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. கிராபிக்ஸ் டீம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

திரைக்கதையை பொறுத்தவரை இயக்குநர் பி.வி.சங்கர், இன்னும் திறம்பட செய்திருக்கலாம். இடைவேளை வரை, திரைக்கதையில் ஒன்றுமே இல்லை! எதை நோக்கிச் செல்கிறது என்பது தெரியாமல் செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு தான், டிவிஸ்ட்டு, சுவாரசியமே!

‘கள்வன்’ னை யானைன்னும் சொல்லலாம். திருடன்னும் சொல்லலாம்.

கள்வன் – பாதிப் படம் தான், நல்லாயிருக்கு!