ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 – கமல் பங்கேற்பு!

திரையுலகினருக்கும் சென்சார் போர்டுக்கும் கடந்த பல வருடங்களாக சென்சார் சான்றிதழ் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. திரையுலகினர் சென்சார் போர்டால் வழங்கப்பட்ட சான்றிதழில் திருப்தி கிடைக்காவிட்டால், சென்சார் ட்ரிபியூனலுக்கு சென்று முறையிடுவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசால் சென்சார் ட்ரிபியூனல் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து  புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 கொண்டு வர முயற்சித்து வருகிறது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் போர்டால் சான்று வழங்கப்பட்டு  வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வு செய்ய வழிவகை செய்யும்.

இந்த சட்டத்தால் தனி நபரோ, அமைப்போ ஒரு படத்தை வெளியிடமுடியாமல் கூட செய்யமுடியும். மேலும் ஒரு படத்துக்கு வழங்கிய சான்றை, பார்வையாளர்களின் புகாரின் பேரில் திரும்பவும் பெற முடியும். இந்த புதிய விதிமுறையால் திரைத்துறைக்கு கடும் சிக்கலாக்கிவிடும். படைப்பாளிகளின் கருத்துரிமையும் கெள்விக்குள்ளாகும்.

‘ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கருத்துரிமையை நெறிக்கக் கூடாது’: சூர்யா, கமல் எதிர்ப்பு

இந்த புதிய திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், ஷபானா அஸ்மி, ஃபரான் அக்தர், கமல்ஹாசன், சூரியா உட்பட பலர் இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.

ஒரு சாரார் எதிரிப்பு தெரிவித்த போதும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஷியாம் பெனெகல் உள்ளிட்ட சிலர் இந்த புதிய சட்டத்தால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் நடை பெறும் புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 குறித்த, திரையுலகினர் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்றில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்ய இருக்கிறார்.