‘கனா’ – விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘கனா’. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன்,சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். நடிகர்கள் பொதுவா படத்தயாரிப்புக்கு அவ்வளவு சீக்கிரமா வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அந்தக்கதை அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அப்படி சிவகார்த்திகேயன் மனதுக்கு நெருக்கமான படம் தான் இந்த ‘கனா’ படம்.
விளையாட்டை மைய்யப்படுத்தி வந்த பல படங்கள் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற படங்களாகவே இருந்திருக்கின்றன. அந்த வகையில் மகளிர் விளையாட்டை மைய்யப்படுத்தி வந்திருக்கும் இந்த ‘கனா’ படம் வெற்றி பெருமா பார்ப்போம்.

வானத்தையும், காவிரியையும் எதிர்பார்த்து தினம் தினம் ஏமாறும் ஏழை டெல்ட்டா விவசாயி சத்யராஜ். தன்னுடைய மனைவி ரமா, மகள் ஐஸ்வர்யாவுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருக்கு பிடித்த பொழுதுபோக்கு கிரிக்கெட். அதுவும் இந்தியா டீம் விளையாடினால் அவ்வளவு தான். டிவி முன்னாடியே தான் அன்றைய பொழுது.

சத்யராஜின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அவரது அப்பாவின் மேல் மிகப்பெரிய பாசம் வைத்திருப்பவர். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா தோல்வியடைகிறது. கடும் அதிர்ச்சியடையும் சத்யராஜ் கண்களில் நீர் வருகிறது. எப்பவுமே தன்னோட அப்பாவை சந்தோஷமாக பார்த்து வந்த ஐஸ்வர்யாவுக்கு அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இந்திய கிரிக்கெட் டீமில் சேர்ந்து ஜெயிப்பதாக அவர் ஒரு சபதம் ஏற்கிறார்.

சின்ன கிராமத்தில் இருந்துவரும் அவர் நினைத்தபடி நடந்ததா இல்லையா என்பது தான் ‘கனா’.
பொதுவாக எந்த ஒரு விளையாட்டை மைய்யப்படுத்தி எடுத்தாலும் அந்த விளையாட்டைப் பற்றி தெரியாதவர்களுக்கு கூட அது பிடிக்கவேண்டும். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த, தெரிந்த கிரிக்கெட்டை கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்காமராஜ்.

கிராமங்களில் இருக்கும் மாணவர்கள், அவர்களது படிப்பிற்கே பல தடைகளையும், சிரமங்களையும் கடக்க வேண்டியிருக்கும். விளையாட்டு என்றால் கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் ஒரு பெண் கிரிக்கெட் விளையாட நினைத்தால் என்ன பிரச்சனைகள் எல்லாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நீரின்றி கருகும் பயிர்கள். வங்கி அதிகாரிகளின் அடாவடிதனங்கள் என விவசாயிகள் படும்பாட்டை திரைக்கதையின் ஊடே சொல்லியிருப்பது நிகழ்வுகளின் நிஜம். இருந்தாலும் வலியே திணிக்கப்பட்ட செயற்கையான காட்சிகளாகவே தெரிகிறது. ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு’ ன்னு வர்ற வாட்ஸ் சப் மெஸெஜாகவே இந்தக்காட்சிகள்.

படம் முழுவதையும் தன் தோளில் சுமந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருக்கு பிறகு இளவரசு, சிவகார்த்திகேயன் நன்றாக நடித்துள்ளனர். சத்யராஜூக்கு என்ன ஆச்சுன்னு தெரியவில்லை பெயரளவுக்கு வந்து போகிறார். சிறந்த நடிகரான அவரிடம் இந்த மாதிரியான நடிப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை ஆதிமூலம் ஐயா (சீதக்காதி) ஆவி வெளியே போயிடுச்சா.. இல்ல.. இயக்குனருக்கு சாமர்த்தியம் இல்லையா?

சிவகார்த்திகேயன் வரும் காட்சிகள் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது. ‘வாயாடி’ பாடலும் ‘சவால்’ பாடலும் இனிமை. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் பெருமை சொல்லும் இந்தப் படம்.

கிரிக்கெட் பற்றி இதற்கு முன் வந்த ஒரு படம் கிரிக்கெட் ஊழலை ஆழமாக அலசிவிட்டதால் ‘கனா’ பெரிதாக தோன்றவில்லை. இருப்பினும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சிகள் இந்தியா, பாகிஸ்தான் 20/20 போலத்தான் இருக்கிறது.