சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ‘கனா’ திரைப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஒரு தனித்துவமான திரைப்படம். இதற்கு முன்பு திரையில் பார்த்திராத சிறப்பு அம்சத்துடன் வெளியாக இருக்கிறது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கூடுதலாக, ஒரு தந்தை தன் மகளின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவளுக்கு பக்க பலமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்த படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.
இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “பெண்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எப்போதுமே நமக்கு உற்சாகம் அளிப்பதாகும். குறிப்பாக, அவர்கள் தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் சாதிப்பது. இது என் எண்ணம் மற்றும் நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சமீபத்திய ஐ.சி.சி. டி 20 உலகக் கோப்பையில் இதை கண்டிருக்கிறது” என்றார்.
இந்த படத்தில் எமோஷன் பற்றி அவர் கூறும்போது, “இது வெறுமனே பெண்களின் கனவுகளையும் சாதனைகளையும் சொல்வதை தாண்டி, யதார்த்தமான முறையில் அவர்களுக்கு பின்னால் நின்று சாதிக்க துணையாக நிறபவர்களை சொல்லும் பற்றி சொல்லும் படமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கனாவில் தந்தை மற்றும் மகள் இடையே உள்ள பிணைப்பு, முழு படத்தையும் எமோஷனால் அலங்கரித்திருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் மிக நிறைவாக செய்திருக்கிறார். சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட அத்தியாயங்கள் நிஜ வாழ்க்கையில் நம்மை பிரதிபலிப்பதோடு, ஊக்கமளிக்கும் என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
கனா படத்தின் இசை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.