அஜித், ரஜினி படங்களை இயக்கிய இயக்குநர் சிவா இயக்கத்தில், சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வரும் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் திரைப்படம், கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சூர்யா உள்ளிட்ட ‘கங்குவா’ திரைப்படக்குழு இந்தியா முழுவதும், படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.
கங்குவா திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், 3D, IMAX, PXL மற்றும் EPIQ வடிவங்களில் வெளியாகிறது.
இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் தொடங்கப்பட்டது. குறிப்பாக, வட அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோக்களுக்கு 10,00,000 லட்சதிற்கும் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா 3,50,000 லட்சத்தை எட்டுவதற்கே முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இதே நிலை தான், இந்தியா தவிர்த்த பிற நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. கங்குவா திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் 1000 கோடியைத் தாண்டும் என்றும், அதற்கான GSTவரியை செலுத்திய ரசீதை, இணைய தளத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சிக்கல் உருவாகியிருக்கிறது.
கங்குவா திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் படங்கள் இதற்கு முன்னர் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே தாக்கத்தினை ஏற்படுத்தாதது தான் இந்த மந்த நிலைக்கு காரணம், என கூறப்படுகிறது. மேலும், போதிய விளம்பரங்கள் செய்யப்படாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு கங்குவா படத்தின் மீதான ஈர்ப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலரை வெளியிட கங்குவா டீம் திட்டமிட்டுள்ளது. அந்த டிரெய்லர் மிகப்பெரிய ஈர்ப்பை உருவாக்கினால் மட்டுமே முன்பதிவில் உற்சாகம் ஏற்படும் என கூறப்படுகிறது! சூர்யா, 1000 கோடிகளை குவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் உறுதியான நம்பிக்கையை காப்பாற்றுவாரா, பார்க்கலாம்!