சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடப்பட்ட 63 நாயன்மார்களில் ஒருவர் தான் கண்ணப்ப நாயனார். திண்ணன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், சிவனின் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக தனது கண்ணைப்பிடுங்கி சிவனின் கண்ணில் அப்பியதால், இவர் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
‘கண்ணப்பா’ திரைப்படத்தின் கதை, சேக்கிழார் எழுதிய ‘கண்ணப்ப நாயனார்’ புராணத்திலிருந்து அநேக மாறுதல்களை கொண்டுள்ளது.
மகாதேவ சாஸ்திரி என்பவர் வாயு லிங்கத்தை ஆகம விதிமுறைப்படி பூசை செய்து வருகிறார். திண்ணன், அதற்கு முற்றிலும் எதிராக அந்த லிங்கத்திற்கு பூசை செய்கிறார். இதனைக் கண்ட மகாதேவ சாஸ்திரி, திண்ணனை கடுமையாக தண்டிக்கிறார். அப்போது சிவன் நேரில் தோன்றி பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். இதுவே ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட ஆன்மீக திரைப்படம்.
கண்ணப்ப நாயனாரான ‘தின்னண்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, அந்த கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப்போயிருக்கிறார். இத்திரைப்படம், அவருடைய திரையுல்க வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும். காதல், ஆன்மீக காட்சிகளிலும், போர்க்கள காட்சிகளிலும் சிறப்பாக உணர்வுகளை பிரதிபலிக்கிறார். குறிப்பாக, ப்ரீத்தா மோகனுடனான காதல் காட்சிகளில் அதிக கவனம் ஈர்க்கிறார்.
திண்ணனின் காதலி மற்றும் மனைவியாக பிரீத்தி முகுந்தன், அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுகிறார். காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
தின்னணின் அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமார் அளவான நடிப்பின் மூலம் சிறப்பு சேர்க்கிறார்.
மகாதேவ சாஸ்திரியாக மோகன் பாபு. அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் நடித்து கவனம் ஈர்க்கிறார்.
ருத்ரனாக நடித்திருக்கிறார், பிரபாஸ். வழக்கமான தனது வசீகர நடிப்பின் மூலம் திரையை ஆக்கிரமித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் சிறிது நேரம், ஆண், பெண் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் கூச்சலிடுகின்றனர்.
திண்ணனே முற்பிறவியில் அர்ஜூனன். என விளக்கும் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. விஷ்ணு மஞ்சுவிற்கும் மோகன்லாலுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி சூப்பர்.
இது தவிர போர்க்கள காட்சிகள் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறது.
மற்றபடி மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
நியுஸிலாந்து நாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், சிறப்பாக இருக்கிறது. ஷெல்டன் சாவின் ஒளிப்பதிவு, ஸ்டீபன் தேவஸியின் பிண்ணனி இசை இரண்டுமே படத்தின் மிகப்பெரும் பலமாக இருக்கிறது. இது தவிர, படத்தில் அனைத்து தொழில் நுட்பங்களும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
கண்ணப்ப நாயனாரின் கதை மாற்றப்பட்டிருந்தாலும், ஆன்மீக பக்தர்கள் மெய் சிலிர்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் முகேஷ் குமார் சிங்.
கண்ணப்பா ஆன்மீகப் படம் என்றாலும், அனைத்து தரப்பினரையும் கவரும்!