கன்னி மாடம் – விமர்சனம்

Review

திரையுலகில் நன்கு பரிச்சயமான நடிகர் போஸ் வெங்கட், ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஶ்ரீராம் கார்த்திக்,  விஷ்ணு ராமசாமி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாயா தேவி, வலீனா ப்ரின்ஸ் இவர்களுடன் ‘ரோபோ’ ஷங்கரின் மனைவி பிரியங்கா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ரூபி’ ஃபிலிம்ஸ் சார்பில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘வண்டி’ படத்தை தயாரித்த ஹஷீர் கன்னி மாடம் படத்தை தயாரித்துள்ளார். இனியன் ஜெ ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தபடத்திற்கு ஹரி சாய் இசை அமைத்துள்ளார்.

ஶ்ரீராம் கார்த்திக், ‘ஆடுகளம்’ முருகதாஸ் இருவரும் சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள். ஶ்ரீராம் கார்த்திக்,  மதுரையில் இருந்து தப்பித்து வரும் விஷ்ணு ராமசாமி, சாயா தேவி காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார். மதுரையிலிருந்து ஒரு கும்பல் இவர்களைத்தேடி சென்னை வருகிறது. பல இன்னல்களுக்கு பிறகு வாழத்தொடங்கும் காதல் ஜோடியை விதி பிரித்து விடுகிறது.

ஶ்ரீராம் கார்த்திக், கர்ப்பமுற்ற சாயா தேவி தன்னுடைய மனைவி எனக்கூறி தனிக்குடித்தனம் வைக்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை உணர்வுகளுக்கிடையில், பதை பதைக்கும் திரைக்கதையால், நெஞ்சை விட்டு அகலாத ஒரு வாழ்க்கையை கண்முன்னே காட்டியுள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட்.

தினமும் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வந்து போகும் சென்னையில் அறிமுகமில்லாத நபர்களிடம் தஞ்சம் புகும் காதல் ஜோடிகளை சீரழிக்கும் கும்பல். கொண்டு வந்த பணமும், நகையும் செலவான நிலையில் நிர்க்கதியாய் தவிக்கும் காதலர்கள். இவற்றை காட்சிப்படுத்தி காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

மேலும் சாதிவெறி ஒருவருக்குள் எப்படி ஊறிப்போய் கிடக்கிறது என்பதை கஜராஜ் மூலமாக காட்சிப்படுத்தி பதை பதைக்கச்செய்கிறார்.

சோகங்களை தன்னுள் புதைத்துக்கொண்டு வாழும் இளைஞனாக ஶ்ரீராம் கார்த்திக். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிர் கொடுத்துள்ளார்.

சாயா தேவி தன்னுடைய பெரிய கண்களால் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். ‘மைம்’ கோபி அவரை மிரட்டும் போது அவர் காட்டும் பாவனையிலேயே நல்ல நடிகை என நிரூப்பிக்கிறார்.

முதிர்ச்சியற்ற காதலனாக நடித்துள்ள விஷ்ணு ராமசாமி சரியான தேர்வு.

நிறைவேறாத காதலை மனதுக்குள் மறைத்துக்கொண்டு, திருமணத்திற்கு சம்மதிக்கும்  ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்துள்ள வலீனா பிரின்ஸ் சிறப்பு.

கவுன்சிலர் அழகுமணியாக நடித்துள்ள பிரியங்கா ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான வரவு. அவரும் ‘ஆடுகளம்’ முருகதாஸூம் சேர்ந்து அடிக்கும் லூட்டி சிரிப்பை வரவைக்கிறது.

சாதிவெறியை கண்முன் நிறுத்தும் கஜராஜ், சினிமாவால் வாழ்க்கையை தொலைத்த ‘ஸ்கொயர் ஸ்டார்’ சூப்பர் குட் சுப்பிரமணி இப்படி படத்தில் நடித்தவர்கள் சிறப்பு செய்துள்ளனர்.

முதல் பாதி சற்று தொய்வடையும் நிலையில் இரண்டாம் பாதி அதை சமன் செய்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சியை சாதி ‘வெறி’யர்களுக்கு ‘சமர்ப்பணம்’ செய்திருக்கிறார். இயக்குனர் போஸ் வெங்கட். அருமையான க்ளைமாக்ஸ்!