‘காந்தாரா – அத்தியாயம் 1’ – (விமர்சனம்) மாயாஜாலம்!

‘காந்தாரா’  திரைப்படத்தின் மிக பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் திரைப்படம், ‘காந்தாரா – அத்தியாயம் 1’. அனிருத் மகேஷ், ஷானில் கவுதம் ஆகியோருடன் இணைந்து, கதை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார், ரிஷப் ஷெட்டி. அவருடன் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, ப்ரமோத் ஷெட்டி, ராகேஷ் பூஜாரி, ப்ரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஹோம்பாலே ஃபிலிம்ஸ்’ சார்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி வசிக்கும் வளமிக்க காந்தாரா பகுதியில் உள்ள இயற்கை வளங்களையும், தெய்வீக சக்தியையும் அடைய, காலகாலமாக பாங்க்ரா நாட்டின் மன்னரான ஜெயராம் முன்னோர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  ரிஷப் ஷெட்டி தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களை கொண்டுவந்து. பாங்க்ரா நாட்டு துறைமுகத்தில் வியாபாரம் செய்கிறார். இதை, பாங்க்ரா நாட்டின் மன்னர் ஜெயராமும், இளவரசர் குல்சன் தேவய்யாவும் எதிர்க்கின்றனர். ஆனால், இளவரசி ருக்மணி வசந்த் வியாபாரம் செய்ய அனுமதிக்கிறார்.

இளவரசர் குல்சன் தேவய்யா, பெரும் படையுடன் காந்தாராவுக்குள் நுழைகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘காந்தாரா – அத்தியாயம் 1’.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, குழப்பமாகவும் விறுவிறுப்பின்றியும் நகர்கிறது. யூகிக்கும்படியான காட்சிகள் சோர்வைத் தருகிறது. ஆனால், கிராபிக்ஸ் மற்றும் வி எஃபெக்ட்ஸ் மிரட்டியுள்ளன. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை, பிரம்மாண்டம். காடுகள், மலைகள், அருவிகள், விலங்குகள்  என அனைத்தும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சண்டைகாட்சிகள் அனைத்தும் வாய்பிளந்து பார்க்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல்.

ரிஷப் ஷெட்டி கதாபாத்திரத்திற்கு கச்சிதம் சேர்த்துள்ளார். ருக்மினி வசந்துடனான காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.

வசீகரமான நடை, உடையுடன் ருக்மினி வசந்த், சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மன்னராக நடித்திருக்கும் ஜெயராம், இளவரசனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா இருவரும் கவனிக்கத்தக்க வகையில் நடித்துள்ளனர்.

அரவிந்த் S காஷ்யப் ஒளிப்பதிவும்,  B. அஜனீஷ் லோக்நாத் இசையும் படத்திற்கு பெரும் பலம்.

‘காந்தாரா அத்தியாயம் 1‘, உணர்வுப் பூர்வமாக மனதை கவரவில்லை என்றாலும், பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் கண்களை வசீகரிக்கிறது!

காந்தாரா – அத்தியாயம் 1 – மாயாஜாலம்!