மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் கர்ணன். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார்.
தனுஷ், யோகி பாபு, லால், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்படத்தில் ‘பொடியன்குளம்’ என்று சித்தரிக்கப்பட்ட ஒரு ஊரில் நடக்கும் சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள, கொடியன்குளம் ஊரை ஞாபகப்படுத்துகிறது.
தனுஷ் வசித்துவரும் பொடியன்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்துவது கிடையாது. இதனால் அன்றாட வேலைகளுக்கும், அவசர மருத்துவ உதவிகளுக்கும் செல்பவர்கள் அருகில் உள்ள ஊரின் பஸ் நிறுத்தத்தில் தான் ஏறுவதும், இறங்குவதும். அதற்கு அந்த ஊரில் வசிக்கும் வேறு பிரிவினர் அவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர்.
பொடியன்குளம் கிராம மக்கள் தங்களுடைய ஊரில் பஸ் நிறுத்தம் வேண்டுமென கலெக்டரிடம் பல தடவை முறையிட்டும் பலனில்லை.
ஒருநாள் அம்மாவுடன் மருத்துமனைக்கு செல்லும் சிறுவன் நிற்காமல் செல்லும் பஸ் மீது கல்லெறிகிறான். அது பூதாகரமான பிரச்சனையாக உருவெடுக்கிறது.
இதன்பின்னர் நடக்கும் சம்பவங்களே ‘கர்ணன்’ படத்தின் கதை.
தனுஷ், கர்ணன் கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தி போகிறார். உணர்வுகளை சிறப்பாக வெளிக்காட்டி நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.
அவரின் காதலியாக நடித்த ரெஜிஷா விஜயன், கௌரி கிஷன், என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
யோகிபாபு, லால், லட்சுமிபிரியா சந்திரமௌளி மூவருக்குமே சிறப்பான கதாபாத்திரங்கள். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ். போலீஸுக்கே உரித்தான ஈகோ. அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சாதி. இரண்டும் சேர்ந்தால் என்ன நடக்கும், என்பதை இவர் மூலம் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.
‘பூ’ ராம், ஜி.எம்.குமார், சண்முகராஜன், சுபத்ரா, அழகம்பெருமாள் என ஒவ்வொருவரும் கிராமத்து மக்களாகவே மாறியிருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு சிறப்பு. சந்தோஷ் நாராயணனின் இசை ஒகே. படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. இதனால் சற்று சோர்வு. இரண்டாம் பாதி பரவாயில்லை.
சில முரண்பாடுகளுடன் ‘கர்ணன்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
சாதிய அடக்குமுறைக்கு எதிரான அழுத்தமான பதிவு!