அரசியலுக்கு முழுக்குப் போட்ட கருணாஸ்! சினிமாவுக்கு திரும்பினார்.

நடிகர், அரசியல்வாதியான கருணாஸ், தனது கல்லூரி கால வாழ்க்கையிலே ‘கானா’ பாடுவதில் வல்லமை பெற்றுவர். 90 களின் ஆரம்பத்தில் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் கலை விழாக்களில் இவரது பங்கு நிச்சயமாக இருக்கும். பின்னாட்களில் பாலாவின் ‘நந்தா’ படத்தின் மூலம் சினிமாவில் புகழ்பெற்ற சிரிப்பு நடிகராகவும், அனைவரின் பாராட்டை பெற்ற குணசித்திர நடிகராகவும் இருந்து வருபவர். அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருபவர்.

இந்நிலையில், சூரியா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தினை இயக்கிவரும் இயக்குனர்  வெற்றிமாறனிடம் கருணாஸ் உதவி இயக்குனராக இனைவதாக வந்த செய்தியினை தொடர்ந்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது…..

‘கிராமிய கானா பாடகராக என் கலை வாழ்வைத் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும்  எனக்கு கொடுத்தது சினிமாதான். தாய்மொழியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து  இருக்கிறேன்.

தொடர்ந்து  ஆற்றல் மிகு  இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவில் சிறப்பு. என்னை  இணைத்துக்கொண்ட வெற்றிக்கு என் நன்றி.  தற்போது பல்வேறு திரைப்படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழர் வீரத்தை பறைசாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

ராமனுக்கு அணிலாக இருப்பதைப்போல் இந்த வெற்றி அணியில் வெற்றிமாறனுக்கு நானும் ஒரு அணில் போல் இருக்க விரும்பினேன். போலி அரசியலை புறந்தள்ளி விட்டு எனது கலைத் தாய் வீட்டுக்குத் திரும்பி இருக்கிறேன் .நீண்டகாலமாக என்னுள் இருந்த உதவி இயக்குனர்  கனவை ‘வாடிவாசல்’ வாசல் திறந்து விட்டிருக்கிறது .இவ்வாறு அவர் கூறினார்.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு வட மாடுகளின் வாழ்வியல் சொல்லும்  திரைப்படம். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.