‘எடிட்டர்’ லெனின், கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்க, ‘மேப்பிள் லீஃப்’ புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘கட்டில்’ படத்தினை தயாரித்து, இயக்கியிருக்கிறார், இ.வி.கணேஷ்பாபு.
மூன்று தலைமுறை கதாநாயகனாக நடித்திருக்கும் இ.வி.கணேஷ் பாபுவுடன், சிருஷ்டி டாங்கே, கணிகா, கீதா கைலாசம், விதார்த், ‘செம்மலர்’ அன்னம் , இந்திரா செளந்திரராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வசதியான குடும்பத்தில், வாரிசு தாரர்களிடையே நடக்கும் பாகப் பிரிவினையின் போது ஒரு பெரிய வீட்டினை விற்க முடிவு செய்கின்றனர். அப்போது அந்த வீட்டில் பல தலைமுறைகளை கடந்து அவர்களுடனேயே இருந்து வரும் கட்டிலின் மீது எமோஷனலாக அட்டாச் ஆகிவிடுகிறார், அந்த வீட்டின் வாரிசு தாரர்களில் ஒருவரான இ.வி. கணேஷ் பாபு. ஏன், எதற்கு என்பதும், அந்த கட்டிலுக்காக போராடும் அவருக்கு அது கிடைத்ததா, இல்லையா? என்பதே ‘கட்டில்’ படத்தின் மொத்தக் கதையும்!
கட்டிலுக்கும் அந்த குடும்பத்திற்குமான காட்சிகள் அழுத்தமின்றி பதிவு செய்திருப்பதால், சோர்வு ஏற்படுகிறது. குறிப்பாக கட்டிலுக்கு எந்த விலை என்றாலும், அதை அடைந்தே தீருவது என்ற லட்சியத்திலிருக்கும், இ.வி.கணேஷ் பாபுவுக்கும் கட்டிலுக்கும் ஆன தொடர்பு சுவாரசியமாக இல்லை. திரைக்கதை ஒரு நேர்கோட்டினில் செல்ல முடியாமல் அங்குமிங்கும் அலைபாய்கிறது. குடிகார குடும்பத்தின் கர்ப்பிணிப் பெண், தொழிற் சங்கப் போராட்டம், வேலை நிறுத்தம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வலிய திணிக்கப்பட்டுள்ளது. திரைக்கதைக்கு இது எந்த விதத்திலும் உதவவில்லை!
பாரம்பரியமான அந்த வீட்டினையும், அதிலிருந்த கட்டில் குறித்தும் விதார்த் கடந்த கால வாழ்க்கையினை விவரிக்கும் போது சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது. ஆனால் அதற்கு பிறகு அது கானாமல் போகிறது.
கட்டில் படத்தின் மூலம் அறிமுகமான கீதா கைலாசம், கதாபாத்திரத்திற்கு வெகுவாக ஒத்துப்போகிறார். கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் விதார்த், மனம் நிறைகிறார். கணேஷ் பாபு தன்னால் முடிந்தவரை மூன்றுவிதமான கதாபாத்திரங்களில் வித்தியாசப்படுத்தி நடித்துள்ளார். இயக்குனருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்பட்டுள்ளார், சிருஷ்டி டாங்கே.
ராமையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், இந்திரா செளந்திரராஜன் அனைவரின் மனதினையும் எளிதில் கவர்ந்து விடுகிறார்.
ஸ்ரீகாந்த் தேவை இசை, ரவிசங்கரனின் ஒளிப்பதிவு இரண்டுமே ஓகே!
கட்டில் – சொல்லத் தெரியாமல் சொல்லப்பட்டிருக்கும், இதுவரை சொல்லப்படாத கதை!