நக்கல், நையாண்டி பிடித்த பிச்சைக்காரர் கவின். ஒரு பெரிய கோடீஸ்வரரின் பிறந்த நாளுக்காக நடக்கும் விருந்தில் பிச்சைக்காரர்களுக்கு அவரது அரண்மனையில் விருந்து வழங்கப்படுகிறது. விருந்து முடிந்தவுடன் மற்ற பிச்சைக்காரர்கள் சென்ற நிலையில், கவின் மட்டும் அந்த அரண்மனை உள்ளே செல்கிறார். 2 நாட்கள் அங்கேயே தங்க முடிவு செய்கிறார். ஆனால், கோடீஸ்வரரின் வாரிசுகள் சொத்தைப் பிரித்து கொள்வதற்காக அந்த அரண்மனைக்குள் வருகிறார்கள். சொத்தைப் பிரித்து கொள்ள நடக்கும் சண்டைக்கு நடுவே அரண்மனைக்குள் இருக்கும் கவினையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஏன், எதற்கு? என்பது தான் ‘பிளடி பெக்கர்’ படத்தின் கதை.
‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, கவின் அவரது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். கேஷுவலாக பிச்சைக் கேட்கும் காட்சிகளிலும், ஃபிளாஷ் பேக் காட்சிகளில் கதறி அழும் காட்சிகளிலும், அரண்மனைக்குள் மாட்டிக்கொண்டு உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி நடித்து அசத்தியிருக்கிறார். இயக்குநர்களுக்கு சவால் விடும் நடிகராக அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கவினின் கேரியரில், இந்தப்படத்தினை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
கவின், ரெடின் கிங்ஸ்லி இவர்களுக்கு பிறகு மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் ஆகியோரும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் பேயாக வரும் ரெடின் கிங்ஸ்லி, மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்க வைக்கிறார். வழக்கமான அவரது கவுன்ட்டர்கள் ரசிக்க வைக்கின்றன.
சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு, ஜென் மார்ட்டினின் இசை, மணிமொழியன் ராமதுரையின் அரங்க வடிவமைப்பு என தொழில் நுட்பக்குழுவின் அனைத்துப்பணிகளும் சிறப்பு. ஆடை வடிவமைப்பாளர் ஜெய் சக்தியின் உழைப்பு தனித்து விளங்குகிறது.
படம் முழுவதும் இயக்குநர் நெல்சன் பாணியிலேயே இருக்கிறது. இது கடிக் காமெடியை ரசிப்பவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்.
அரண்மனைக்குள் கவினைத் தேடி அலையும் காட்சிகள், இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்கலாம். சுவாரசியமின்றியும், செயற்கைத் தனமாகவும் இருப்பதால் சோர்வு ஏற்ப்படுகிறது.
மொத்தத்தில், இந்த `பிளடி பெக்கர்’ டார்க் காமெடி ரசிகர்களுக்கானது!