யுவன் + இளன் கூட்டணியின் ‘ஸ்டார்’ படத்தின் டிரைலர் வெளியானது!

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட்’ மற்றும் ‘ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா’ ஆகிய பட நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பி.ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், ‘லொள்ளு சபா’ மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என்.வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத் தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, ‘ஸ்டார்’ எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌

இதனால் எதிர்வரும் மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.