Kayiru – Review
ஸ்கைவே பிக்சர்ஸ் சார்பாக ஜமால் முகம்மது தயாரித்து, கணேஷ் எழுதி இயக்கியுள்ள படம் ‘கயிறு’. எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ், ‘ஹலோ’ கந்தசாமி, சேரன்ராஜ், பிந்து ஆகியோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை குவித்த இந்தப்படம் அத்தனை சிறப்புகளை உடையதா?
முதலில் இந்த ‘பூம் பூம் மாடு’ என்றால் என்ன என்பதை பார்ப்போம். தமிழக தென் பகுதிகளில் மதுரை, துத்துகுடி பகுதிகளில் ஏழுமலையான் (பெருமாள்) சாமிக்கு நேர்ச்சையாக விடப்படும் இளம் காளைகளை ஒரு சமூகத்தினர் பழக்கப்படுத்தி வீடு வீடாக சென்று அருள்வாக்கு சொல்லி யாசகம் பெற்றுகொள்வதை வாழ்க்கையாக கொண்டவர்கள். மாடுகளை இவர்கள் விலைக்கு வாங்குவதில்லை என்பது குறிப்பிடதக்கது.
மதுரை ‘சக்கி மங்களம்’ கிராமத்தில் பூம் பூம் மாட்டுகாரர்கள் சுமார் 150 குடும்பத்தினர்கள் இன்றும் வசித்து வருகின்றனர். வேறு தொழில்செய்ய வழியில்லாமல், வேதனையோடு வாழ்ந்து வரும் இவர்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்கு படித்து வேறு வேலைக்கு செல்வதையே ஒட்டு மொத்த கிராமத்தினரும் விரும்புகின்றனர்.
இப்போது விமர்சனத்திற்கு வருவோம். பூம் பூம் மாட்டுக்கார சமூகத்தை சேர்ந்த எஸ்.ஆர்.குணா குறி சொல்லி பிழைப்பு நடத்துபவர். அவரை தவறான குறி சொல்லியதாக கருதும் அந்த ஊரின் தலைவர் தான் கொடுத்த நிலத்தில் பயிர் செய்து பிழைத்துக்கொள்ளுமாறு கட்டளையிடுகிறார். உழைப்பதற்கு பிடிக்காமல் இது தன்னுடைய குலத்தொழில் அதை விடமாட்டேன் என தனக்குள்ளே கூறிக்கொண்டு வேறு ஊருக்கு செல்கிறார்.
அடுத்த ஊருக்குச் சென்ற அவர், அங்கு ஒரு இளம் பெண்ணை சந்திக்க இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. பெண்ணின் அம்மாவும், உறவினர்களும் உள்ளூரிலோ, வெளிநாட்டிலோ வேறு வேலைக்கு செல்ல உதவ முன்வருகின்றனர். அப்படி வேறு வேலைக்கு சென்றால் திருமணம் செய்து தருவதாகவும் கூறுகின்றனர்.
அவர்களிடமும் எஸ்.ஆர்.குணா இது எங்களது குலத்தொழில் இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லமாட்டேன் எனக்கூறி காதலையும் துறக்கிறார். இதன் பின்னர் ஒரு நாள் அவர் குறி சொல்ல பயண்படுத்தி வந்த மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது. எஸ்.ஆர்.குணா அதை கண்டுபிடித்தாரா? தன்னை நம்பி வந்த பெண்ணை கைவிட்டரா? கைபிடித்தாரா? என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்!
ஜெயன் உன்னிதனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகு கொள்ளை கொள்கிறது அதற்கேற்ற பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இருக்கிற ஒன்றிரண்டு முகபாவனகளால் முடிந்தவரை நடித்துள்ளார் ஹீரோ எஸ்.ஆர்.குணா. பூக்காரியாக வரும் காவ்யா மாதவ் தன்னுடைய கண்களின் மூலம் காதலின் ஆசைகளையும், ஏமாற்றத்தையும் அழகுடன் வெளிபடுத்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வபோது சிரிப்பூட்டுகிறார்.
இந்தப்படத்தின் இயக்குனர் கணேஷ், மாட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள பாசத்தை சொல்கிறாரா? பசுவதை பற்றி சொல்கிறாரா? இளைஞனிடம் மனதை பறிகொடுக்கும் பெண்ணின் காதலை சொல்கிறாரா? புரியவில்லை.
ஆனால் குலத்தொழிலை மீண்டும் எப்படியாவது கொண்டுவரத்துடிக்கும் ஒரு கூட்டத்திற்கு இது பிடிக்கும்.
மொத்ததில் உழைக்க மறுக்கும்! ஒரு சோம்பேறி, இளைஞனின் கதை தான் ‘கயிறு’