யோகிபாபு, இன்ஸ்டால்மெண்ட்டில் நடித்துக் கொடுத்தார்! – கிச்சா சுதீப் பரபரப்பு பேச்சு!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில், நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’.  இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது..,

நடிகர் யோகிபாபு,

“நான் சினிமாத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் பிரச்சினைகளும் கூடவே வரும் என்பார்கள். அதுபோலதான் என் மீது சுமத்தப்படும் பல பழிகளும். இந்தப் படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படத்தில் கிச்சா சுதீப் சார் நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது”.

நடிகை தீப்ஷிகா,

“‘மார்க்’ படம் எங்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது. சுதீப் சார் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை ரோஷிணி,

“சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா சுதீப் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்தப் படம் நன்றாக வர வேண்டும் என எல்லோரும் உழைத்திருக்கிறோம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் கிச்சா சுதீப் பேசியதாவது,

“’மார்க்’ போன்ற படத்திற்காக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விஷயம். நிச்சயம் அதற்கான அவுட்புட் திரையில் பார்ப்பீர்கள். கதை சொல்லுதல், புது காட்சிகள், பிசினஸ், நடிகர்களின் நடிப்பு என எல்லாவற்றிலும் புதுமை- வெரைட்டியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ற பணியை இந்தப் படத்தில் செய்திருக்கிறோம் என நம்புகிறேன். விஜய் கார்த்திகேயன் கதை, இயக்கம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எங்க செட்டிலேயே பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபுதான். இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார். நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து,  செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப்பிடம்  திரைப்படத்தில் நடிகைகளை தொடாமல் நடிக்க காரணம் என்ன?  என  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகள் இல்லை. கதைக்கு அது தேவைப்படவும் இல்லை” என கூறியவரிடம், எம்ஜிஆர் போல் பேசுகிறீர்கள், விஜய் மாதிரி முதல்வராக ஆசை உள்ளதா? என எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “அழகாக பேசுபவர்களெல்லாம் முதல்வராக முடியாது. இது போன்ற எண்ணம் இருந்தால் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான்” என்றார்.கிச்சா சுதீப்பைத் தொடர்ந்து யோகி பாபுவிடம், பல மொழிகளில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது? என்றும், படத்தின் அறிமுக விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்வியால் சட்டென டென்ஷன் ஆன யோகிபாபு,  “நான் திரைப்படத்தில் நடிக்க வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டன. தொடர்ச்சியாக பல மொழிப்படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளவில்லை  என குற்றம் சாட்டுகிறார்கள்.. அது ஏற்புடையதல்ல. ஏனென்றால் ஒரு சில படங்களில் நான் 4 காட்சிகள்  மட்டுமே நடித்திருந்தாலும் என்னுடைய புகைப்படத்தை பேனரில் வைத்து ரசிகர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?  என ஏகத்துக்கும் கொந்தளித்தார்.