மனிதம் போற்றும்! ‘கிடா’ விமர்சனம்!

‘ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்’ நிறுவனம் சார்பில், ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா ஆகியோர் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.

கிடா திரைப்படத்தில், பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தாய், தந்தையை இழந்த சிறுவன் தீபன், தனது தாத்தா பூராம், பாட்டி பாண்டியம்மாவுடன் வசித்து வருகிறான். பூராம் கையில் கிடைத்த விவசாய பொருட்களை கொண்டு, அவற்றை மதிப்பு கூட்டி விற்பதில் கிடைக்கும் சொற்ப வருவாயில், குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒரு சில நாட்களில் வரவிருக்கிறது. பண்டிகை என்றாலே சிறுவர்களுக்குத் தானே உற்சாகம் அதிகம். எல்லா சிறுவர்களுக்கும் ஏற்படும் அதே ஆசை, பேரன் தீபனுக்கும் ஏற்படுகிறது. அதாவது, விளம்பரங்களில் காட்டப்படும் ஒரு உடையினை போன்று வாங்க ஆசைப்படுகிறான். அவனது இந்த ஆசையை நிறைவேற்றுவதாக அவனது தாத்தா உறுதியளிக்கிறார். அதற்காக அவர், பல்வேறு வழிகளில் பணத்திற்காக முயற்சி செய்து தோற்று போகிறார். கடைசியில், சிறுவன் தீபன் ஆசையாசையாய்  வளர்த்த ஆட்டுக் கிடாயை விற்க முடிவு செய்கிறார். ஆட்டை விற்க  சிறுவன் தீபன் மறுக்கிறான். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘கிடா’ திரைப்படத்தின் பாசப்போராட்டம்.

தாத்தா – பேரன் – கிடா இவர்களுக்கிடையேயான, நெகிழ்ச்சியான பாசப்போராட்டத்தினை, தனது அழகான திரைக்கதையின் மூலம் விவரித்திருக்கிறார், அறிமுக இயக்குனர் ரா. வெங்கட். மிகைப்படுத்தப்படாத காட்சிகளால் படம் பார்ப்பவர்கள், படத்துடன் ஒன்றிபோய் விடுகின்றனர்.

பூராம், கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். பேரன் ஆசைப்பட்டு கேட்ட, புதிய உடையை வாங்கி கொடுக்க முடியாமல் பரிதவிக்கும் காட்சிகளில், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தி விடுகிறார்.

சேமிப்பின் அவசியத்தை முன்னிறுத்தி, படைக்கப்பட்ட கதாபாத்திரத்தில், பூராமின் மனைவியாக நடித்திருக்கும், பாண்டியம்மாளின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அவரது இயல்பான நடிப்பு, கதாபாத்திரத்தினை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

பேரனாக நடித்த மாஸ்டர் தீபன், குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

கறிக்கடையில், வேலை செய்யும் குடிகாரராக காளி வெங்கட், தனது வழக்கமான சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸில் ஆடு கிடைக்காத போதும் சிறுவனின் உடைக்கான பணத்தை பூராமிடம் கொடுக்கும் காட்சியில், அவர் உயர்ந்து நிற்கிறார்.

காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் லெட்சுமி, மகனாக நடித்திருக்கும் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஜோதி, என படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

டீக்கடைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருப்பு சில இடங்களில் சிரிப்பினை வரவழைக்கிறார்.

தீசனின் இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. மதுரை, மேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் ஜெயப்பிரகாஷ்.

இப்படி பல சிறப்புகள் ‘கிடா’ படத்திற்கு இருந்தாலும், சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று, சிறுவனுக்கும் ஆட்டுக் கிடா’வுக்குமான உறவு. இது குறித்த காட்சிகள் சொல்லப்படாதது, படத்திற்கு பெரிய மைனஸ்!

மற்றபடி, ஆண் கதாபாத்திரங்களால் ஏற்பட்ட பிரச்சனையை, பெண் கதாபாத்திரங்கள் சரி செய்வது. சேமிப்பின் அவசியம், குடியால் தொலையும் பொருளாதாரம், இன்னும்… சில மனிதர்களிடம் இருக்கும் மனித நேயம் போன்றவற்றை, அழகாக காட்சிப்படுத்திய இயக்குனர், ரா வெங்கட்,  நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவர்.