‘கிங்டம்’  –  விமர்சனம்!

‘சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ்,’ ‘’ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ்’ மற்றும் ‘ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் சார்பில், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ள படம் கிங்டம். கௌதம் தின்னனூரி இயக்கியிருக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ், வெங்கடேஷ் வி.பி., அய்யப்ப பி. சர்மா, போசானி கிருஷ்ண முரளி, கோபராஜு ரமணா , மனிஷ் சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா, சத்யதேவ் இருவரும் சகோதரர்கள். இவர்களின் அப்பா குடிகாரர். தினமும் குடித்துவிட்டு இவர்களையும், இவர்களது அம்மாவையும் அடித்து துன்புறுத்துகிறார். ஒரு நாள், வழக்கம்போல் குடித்து விட்டு அடிக்கும்போது சத்யதேவ் அப்பாவை கொலைசெய்து விடுகிறார். சகோதரர்கள் பிரிந்துவிடுகின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ஆந்திராவில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகிறார். அப்போது, இலங்கையிலிருந்து செயல்பட்டு வரும் மாஃபியா கும்பலுக்குள் ஊடுருவி தகவல்களை சேகரிக்க ஒரு அண்டர் கவர் ஆப்பரேஷனை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். அதை சரியாக செய்தால், அங்கே இருக்கும், தேடப்பட்டு வரும் அண்ணனை கண்டுபிடிக்கலாம் என்று உறுதியளிக்கப்படுகிறது.

இலங்கை செல்லும் விஜய் தேவரகொண்டாவிற்கு, ஆந்திராவிலிருந்து சென்ற ஒரு இனக்குழுவை மீட்கும் பொறுப்பு வருகிறது. அவர் என்ன செய்தார்? என்பதை, தனது பொறுப்பற்ற, அறிவற்ற முறையில் பிரம்மாண்டமாக சொல்லியிருக்கிறார், (தமிழர்கள் கொடூர அரக்கர்களாகவும், சர்வதேச குற்றச்செயல்களை செய்யும் இனக்குழுவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.) ‘கிங்டம்’ படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனூரி.

இயக்குநர் கௌதம் தின்னனூரியின் அறிவற்ற கதை, திரைக்கதைக்கு, தன்னுடைய நட்சத்திர மினுமினுப்பினை அள்ளி வழங்கியிருக்கிறார், நாயகன் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றம் , உடல் மொழி, வசனங்கள் என அனைத்துமே ஒருசேர மிளிர்கிறது. மொத்தப் படத்தினையும் தனது நட்சட்த்திர அந்தஸ்தின் மூலமாக தூக்கி நிறுத்தியிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் அண்ணனாக நடித்திருக்கும் சத்யதேவ், தன்னால் முடிந்தவரை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

பாக்யஸ்ரீ போர்ஸ், வெங்கடேஷ் வி.பி., அய்யப்ப பி. சர்மா, போசானி கிருஷ்ண முரளி, கோபராஜு ரமணா , மனிஷ் சவுத்ரி உள்ளிட்டோரும் திரைக்கதைக்கு உதவியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் படத்தின் பலமாக விளங்கியிருக்கிறார்கள்.

‘கிங்டம்’ – விஜய் தேவரகொண்டாவின் மிரட்டல்!