விஜய் ஆண்டனிக்கு ‘கொலை’ புதிய அடையாளம்! – நடிகை ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்து வெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 21, 2023) வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

படம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறும்போது,

“தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகின்றன. ’கொலை’ படத்தில் எனக்கு புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள். கொலையின் மர்மத்தை முறியடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும் அதே வேளையில், அவள் தனது மூத்த அதிகாரிகளுடன் அலுவல் ரீதியான தொல்லைக்கு ஆளாகிறாள். இது அவளுடைய நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆனால், பார்வையாளர்கள் எங்கள் ஆன் ஸ்கிரீனில் காம்போவை ரசிப்பார்கள். விஜய் ஆண்டனி சார் ஒரு அற்புதமான சக நடிகராக இருந்தார். அவர் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரின் மீதும் அக்கறை காட்டுவார். அவர் தனது முந்தைய படங்களில் திறமையான நடிப்பைக் கொடுத்திருந்தாலும், ‘கொலை’ திரைப்படம் அவரை புதிய அவதாரத்தில் காண்பிக்கும். இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே இந்தப் படம் உருவாக முக்கியக் காரணம். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை நேரில் பார்க்கக் காத்திருக்கிறேன். ‘கொலை’ நிச்சயம் அவர்களை ஆச்சரியப்படுத்தும், படத்தில் உள்ள திருப்பங்கள் பார்வையாளர்களின் யூகங்களை நிச்சயம் உடைக்கும்” என்றார்.

‘கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாஜி  குமார் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

’கொலை’ திரைப்படம் ஜூலை 21, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அதை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.