‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியைச் சந்தித்தன. எப்படியும் ஒரு வெற்றிப்படத்தை விஜய் ஆண்டனி கொடுத்தாக வேண்டிய நிலையில் வெளியாகியிருக்கும் படம் ‘கொலைகாரன்.’ வெற்றியை கொடுத்திருக்கிறதா?.
ஆந்திராவின் முக்கியமான அமைச்சர் ஒருவரின் மகன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை குற்றவாளியை கைது செய்யப்போகும் போலீஸ் அதிகாரி அர்ஜூனிடம் நான் தான் கொலை செய்தேன். என்று தானாக வந்து சரணடைகிறார் விஜய் ஆண்டனி. குழப்படமடையும் அர்ஜூன் என்ன முடிவெடுக்கிறார் என்பது தான் ‘கொலைகாரன்’ படத்தின் விறு விறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
படம் ஆரம்பித்த முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் கதை என்ன டிமாண்ட் பண்ணுதோ அதை மட்டுமே பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூலூயிஸ். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் நகர்வதால் ஒரு நல்ல ‘மிஸ்ட்ரி திரில்லர்’ பார்த்த சந்தோஷம் கிடைக்கிறது.
சேஸிங், பில்டப் இல்லாமல் டைலாக் மூலமாகவும் அர்ஜூன், விஜய் ஆண்டனி ஃபேஸ் ரியாக்ஷன் மூலமாகவும் ரசிகர்களை நகம் கடிக்க வைப்பதற்கு தனி திறமை வேண்டும் அதை திறம்பட செய்திருக்கிறார்கள். தேவையில்லாமல் இடம் பெறும் இரண்டு பாடல்களால் சற்று மெதுவாக நகர்ந்தாலும் காட்சிகள் செல்லச்செல்ல வேகமாக நகர்கிறது. சைமன் கே கிங் பின்னணி இசை காட்சிகளை பரபரப்பாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. க்ளைமாக்சை நெருங்கும் போது நடக்கும் ட்விஸ்ட்டுக்கள் நகம் கடிக்க வைக்கும் பிஜிஎம் என்று பார்ப்பவர்களை பக்காவாக மிரட்டுகிறது ‘கொலைகாரன்’
எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுக்கிற விஜய் ஆண்டனிக்கு இந்தப்படம் அவரோட ரியாக்ஷனுக்கு சூப்பரா மேட்ச்சாயிருக்குன்னு தான் சொல்லனும். அதுவே படத்துக்கு ப்ளஸ். ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்துகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜூன். நாயகி ஆஸிமா நர்வால், நாயகியின் அம்மாவான சீதா ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர்.
‘தி டிவோஸன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’என்ற படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆனதாக சொல்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். நமக்கு சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கியிருந்த ‘விடிஞ்சா கல்யாணம்’ ஞாபகத்துல வந்து போகுது!
சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை பார்ப்பவர்களுக்கு ‘கொலைகாரன்’ படம் மிகவும் பிடிக்கும்.