சரத்குமார், சண்முகப் பாண்டியன் , தார்ணிகா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, சுஜித் சங்கர், மதன் பாப் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், கொம்புசீவி. இப்படத்தை, ‘ஸ்டார் சினிமாஸ்’ சார்பில், முகேஷ் டி.செல்லையா தயாரித்திருக்கிறார். பொன்ராம், எழுதி இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
‘வைகை அணை’ கட்டப்பட்ட பிறகு, அதனருகில் இருந்த சில விவசாய கிராமங்கள், அணை குறிப்பிட்ட கொள்ளளவினை எட்டும் போது தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இதனால், அம் மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்கும் சூழல் உருவாகிறது. இதன் காரணமாக கஞ்சா மற்றும் சாராயம் உற்பத்தி செய்யும் வேலையை செய்கின்றனர். அதே ஊரைச்சார்ந்த சரத்குமார் அதிகளவில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். அதில் கிடைக்கும் வருவாயை, அம்மக்களுக்கும் செய்து வருகிறார். இவர்கள் செய்து வரும் சட்ட விரோத செயலை, அந்த ஊரின் இன்ஸ்பெக்டர் தார்ணிகா தட்டிக்கேட்டு வருகிறார். இந்நிலையில், போலீஸ் உயரதிகாரிகள் கஞ்சாத்தொழிலில் ஈடுபட்டு வரும், சரத்குமாரையும் அவரது உதவியாளரான சண்முகபாண்டியனையும் சுட்டுக்கொல்ல முடிவு செய்கின்றனர். இந்நிலையில், 5 கோடி ரூமாய் மதிப்புள்ள கஞ்சாவை, சரத்குமார் ஆந்திராவிற்கு கடத்த முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், கொம்புசீவி.
வைகை அணை. அது கட்டும்போது விவசாய நிலங்களையும், வீடுகளையும் இழந்த மக்களின் ஒரே மாற்றுத்தொழிலாக சாராயமும், கஞ்சாவும் தான் என, அதே ஊரைச் சார்ந்த இயக்குநர் பொன்ராம் காட்சிப்படுத்தியிருப்பது, விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. ஒரு பெரிய சென்சிட்டிவ்வான விஷயத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். படம் பார்க்கும்போது, அணை கட்டபட்ட பிறகு, நடந்த ஏராளமான நல்ல விஷயங்களை இருட்டடிப்பு செய்ததாகவே உணரமுடிகிறது.
முக வடிவிலும், உடல் தோற்றத்திலும் கதாநாயகனுக்குரிய அத்துனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார், சண்முக பாண்டியன். ஆனால், நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. ஆறுதலான விஷயம், முந்தைய படங்களை விட, இந்தப்படத்தில் அவருடைய நடிப்பு பரவாயில்லை.
சண்முக பாண்டியனை விட, ரொக்கப்புலியாக நடித்திருக்கும் சரத்குமாருக்கு அதிகமான காட்சிகள். அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவரது கெட்டப்பை, இன்னும் கொஞ்சம் கவனமாக வடிவமைத்திருக்கலாம்.
வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த ராணியின் மகளான தார்னிகா, இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். கவனம் ஈர்க்கும் அளவில், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். நடிப்புத் திறனை வெளிப்படுத்த போதிய காட்சிகள் இல்லை.
காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், முனிஷ்காந்த், கல்கி ராஜா, மதன் பாப் போன்றவர்களின் காமெடி, கடியோ கடி. இவர்களது காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலவீனம். சுஜித் சங்கர், ராம்ஸ் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை.
யுவன் சங்கர் ராஜா, இசையமைத்திருக்கிறார். அவரே நேரில் வந்து சத்தியம் செய்தாலும் நம்பமுடியாது. பாடல், பின்னணி இசை படு சுமார். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, ஓகே.
பொன்ராம், இதுவரை இயக்கிய படங்களில், இதுவே மோசமான திரைப்படமாக இருக்கும்.
மொத்தத்தில், ‘கொம்புசீவி’ கூர்மை இல்லை.
‘கொம்பு’ இருந்தாத்தானே சீவுவதற்கு!